Published : 19 Aug 2024 07:52 PM
Last Updated : 19 Aug 2024 07:52 PM

மலையாள திரையுலகில் பாலியல் சுரண்டல்: ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

2019-ல் ஹேமா கமிட்டி பினராயி விஜயனிடம் அளித்த அறிக்கை (கோப்புப் படம்)

திருவனந்தபுரம்: மலையாள திரையுலகில் வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதாகவும், பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும் ஹேமா கமிட்டி அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மலையாள நடிகர் திலீப் பாலியல் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பாலின சமத்துவமின்மை தொடர்பாக ஆய்வு செய்ய கடந்த 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்ற கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடத்திய அந்தக் குழு கடந்த 2019 டிசம்பரில் முதலமைச்சர் பினராயி விஜயனிடம் 233 பக்க அறிக்கையை, ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் சமர்ப்பித்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) ஹேமா கமிட்டி அறிக்கையை கேரள அரசு வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஹேமா கமிஷன் அறிக்கை சொல்வதென்ன? - மலையாள திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பெண்கள் பாலியல் ரீதியாக (casting couch) சுரண்டப்படுகிறார்கள் என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் வாய்ப்புகளைப் பெற பல முறை பாலியல் ரீதியான சுரண்டல்கள் நடைபெறுவதாகவும், ஆபத்தான சூழல் நிலவுவதாகவும் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

பல நடிகர்கள் திரைப்பட வாய்ப்புக்காக சமரசம் செய்து கொள்ளுமாறு பெண்களை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் பரவலாக பாலியல் சுரண்டல்கள் நிலவி வருவதாக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பெண்களை சமரசம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும், அதற்கு ஒத்துழைப்பவர்கள், ‘சமரசம் செய்துகொள்ளும் நடிகர்கள்’ என முத்திரை குத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் சுரண்டல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற சூழல்: “மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மற்ற தொழில்களை போல இல்லாமல் பாலியல் சுரண்டல் இங்கே வாய்ப்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர், மருத்துவர், பொறியியல் போன்ற துறைகளில் பெண்கள் இத்தகையை சூழலுக்கு தள்ளப்படுவதில்லை. திறமை மட்டுமே அங்கு முதலிடம் வகிக்கிறது. ஆனால், சினிமாவில் மட்டும் பாலியல் சுரண்டல் முதன்மையானதாக இருப்பது யதார்த்தமான உண்மை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல் குறித்து காவல் துறையில் புகார் அளிக்காததற்கு காரணம், சைபர் தாக்குதல்கள் குறித்த பயம் என குறிப்பிட்டுள்ளனர். “இங்கே அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாஃபியா போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அவர்களை எதிர்க்க முடியாது” என முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பெற்றோர்களுடன் தங்க வேண்டிய கட்டாயம்: படப்பிடிப்புக்கு செல்லும் பெண்கள் ஹோட்டல்களில் அறைகளில் தங்கும்போது, குடிபோதையில் வரும் சிலர் கதவைத் தட்டுவது, அராஜகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், அதன் காரணமாக பாதுகாப்புக்காக பெற்றோர்கள் உள்ளிட்ட குடும்ப நபர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கை குறிப்பிடும் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தனக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ஒரு பெண் வாய் திறந்தால், அவர் பிரச்சினைக்குரியவராக கருதப்பட்டு, அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம் என்பதால் அவர்கள் மவுனம் காக்கின்றனர் என ஹேமா கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக ’அம்மா’ (மலையாள நடிகர் சங்கம்) உள்ளிட்ட திரைப்பட சங்கங்கள் உரிய கவனம் எடுத்து பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x