தனுஷின் ‘ராயன்’ ஆக.23-ல் ஓடிடியில் ரிலீஸ்
சென்னை: வரும் 23-ம் தேதி முதல் தனுஷின் ராயன் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தனுஷ், எழுதி, இயக்கி, நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை 26-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தனுஷுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிஷண், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அண்ணன் - தம்பி - தங்கை பின்னணியில் எழுதப்பட்ட இந்த கதையில் இரண்டு கேங்ஸ்டர் குழுவிடமிருந்து நாயகன் எப்படி தப்புகிறார் என்பது தான் கதை. படத்தில் நடித்த அனைவரும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை இந்தப் படம் பெற்றிருந்தது. சுமார் 100+ கோடியை இந்தப் படம் வசூல் செய்திருந்தது.
இந்தச் சூழலில் ராயன் திரைப்படம் வரும் 23-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இது குறித்த அறிவிப்பை அமேசான் ப்ரைம் நிறுவனம் சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ளது.
