Published : 12 Aug 2024 08:11 AM
Last Updated : 12 Aug 2024 08:11 AM

தனுஷ் குறித்த தயாரிப்பாளர் சங்க தீர்மானம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடிகர் சங்கம் முடிவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், ஆக.16 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படுவதாகவும் கூறப்பட்டு இருந்தது.மேலும் நடிகர் தனுஷுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் சினிமாவின் அனைத்து வேலைகளையும் நிறுத்தப்போவதாக அறிவித்ததற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தனுஷ் குறித்த தீர்மானம் அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தனுஷ் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் நடிகர் சங்கம் கூறியது.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சங்க செயற்குழு நேற்று கூடியது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன், பொருளாளர் கார்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ திரைத்துறையை வேறொரு தளத்துக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அது தொடர்பாக சில நல்ல முடிவுகளை எடுத்துள்ளோம். அதை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் தெரிவிப்போம். சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர் சங்கம் கொடுத்துள்ள புகார் பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் புகார் அனுப்புவதும் அதற்கு நாங்கள் பதில் அனுப்புவதும் வழக்கமான நடைமுறைதான். பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கடிதம் அனுப்பி இருக்கிறார். நாங்கள் ஒரு தேதி சொல்லி இருக்கிறோம். அன்று கூடி அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்ப்போம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x