Published : 10 Aug 2024 07:18 AM
Last Updated : 10 Aug 2024 07:18 AM

‘டிமான்ட்டி காலனி’ 4 பாகம் வரை வரும்! - அருள்நிதி நேர்காணல்

அருள்நிதி ஹீரோவாக நடித்து கடந்த 2015-ம் ஆண்டுவெளியான ஹாரர் படம், ‘டிமான்ட்டி காலனி’. அறிமுக இயக்குநராக அஜய் ஞானமுத்துவுக்குச் சிறந்த அடையாளத்தைக் கொடுத்த படம் இது. இதன் 2-ம் பாகம் ‘டிமான்ட்டி காலனி 2’ என இப்போது உருவாகி இருக்கிறது. வரும் 15-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி அருள்நிதியிடம் பேசினோம்.

‘டிமான்ட்டி காலனி 2’ உருவான கதை எப்படி? - ஒரு படம் ஹிட்டானா அதை சீக்குவல் பண்றது சகஜம்தானே. அப்படித்தான் டிமான்ட்டி காலனி வெற்றி பெற்றதும் அடுத்த பாகம் பண்ணலாம்னு யோசனை வந்தது. இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘இமைக்கா நொடிகள்’ பண்ணும்போதும், 'கோப்ரா' பண்ணும்போதும் நான் அதுபற்றி அவர்கிட்ட கேட்டுட்டே இருந்தேன்.

கரெக்ட்டான கதை அமைஞ்சதும் பண்ணலாம்னு அவர் சொன்னார். அதுக்கான நேரம் அவருக்குத் தேவைப்பட்டது. இடையில, ஒரு லைன் கிடைச்சிருக்கு. அதை எழுதிட்டு சொல்றேன்னு சொன்னார். எழுதி முடிச்சுட்டு சொன்னார். அருமையா இருந்தது. அப்படித்தான் ‘டிமான்ட்டி காலனி 2’ உருவாச்சு.

முதல் பாகத்துக்கும் இதுக்கும் எப்படி ‘கனெக்ட்’ ஆகும்? - அதுதான் கதையே. இதுல வர்ற எல்லோருக்குமே முதல் பாகத்தோட தொடர்பு இருக்கும். அதை அஜய் ஞானமுத்து ரொம்ப சிறப்பா திரைக்கதையில கொண்டு வந்திருக்கார். முதல் பார்ட் 2015-ல் வெளியானது. அந்தக் காலகட்டத்துல இந்தக் கதைக்கு தொடர்பா இன்னொரு கதையும் நடந்திருக்கும்.

9 வருஷத்துக்கு பிறகு இப்ப அதை ஓபன் பண்றோம். அதுவும் இதுவும் இப்ப கனெக்ட் ஆகும். முதல் பாகத்துல ஸ்ரீநி அப்படிங்கற கேரக்டர் பண்ணியிருப்பேன். அந்தப் படம் முடியும்போது அந்தகேரக்டர் இறந்துட்டதாக காண்பிச்சிருப்போம். இதுல ரகுங்கற கேரக்டர்ல வர்றேன்.

அவங்க ரெண்டு பேருக்கும் என்ன தொடர்புன்னு கதை போகும்.முதல் பாகத்தை இப்ப இன்னொரு முறை பார்த்துட்டா, இந்தக் கதைக்குள்ள இன்னும் ஈசியா போயிடலாம்னு நினைக்கிறோம். இருந்தாலும் முதல் பாகத்தோட சில விஷயங்களை இந்தப் படத்தோட தொடக்கத்துல காண்பிக்கிறோம்.

முதல் பாகத்துல இல்லாத பிரியா பவானி சங்கர், அர்ச்சனானு நிறைய பேர் இதுல இருக்காங்களே... இது வேற கதைதானே. அதனால வேற நிறைய கேரக்டர்கள் வர்றாங்க. பிரியா பவானி சங்கருக்கு கதையில முக்கியமான ரோல். கதையை இணைக்கிறதே அவங்களாகத்தான் இருப்பாங்க. அதே போல அருண் பாண்டியன் சார், அர்ச்சனாவுக்கும் நல்ல கேரக்டர்.

அஜய் ஞானமுத்துவோட அசோஸியேட் வெங்கிதான் இதை இயக்குறதா முதல்ல, அறிவிப்பு வந்தது? - ஆமா. அஜய் ஞானமுத்து கதை, தயாரிப்புல வெங்கி இயக்கறதா இருந்தது. முதல் பாகத்துக்கு நல்லவரவேற்பு கிடைச்சது. அஜய் ஞானமுத்துவுக்கும் அந்தப் படம் அடையாளத்தைக் கொடுத்தது. அதனால இரண்டாம் பாகத்தையும் அவரே இயக்கினாதான் நல்லா இருக்கும்னு மொத்த டீமும் நினைச்சாங்க. அப்படித்தான் அஜய் ஞானமுத்து இந்தப் பாகத்தை இயக்கினார்.

இந்தப் படத்தோட அடுத்தடுத்த பாகங்கள் வரப்போகுதாமே? - ஆமா. 2-ம் பாகம் பண்ணும்போதே, 3, 4-ம் பாகங்களுக்கான கதையை ரெடி பண்ணிட்டார் அஜய் ஞானமுத்து. அடுத்த வெற்றிகளை வச்சுதான் இதுதொடரும்னாலும் கதை தயாரா இருக்கு.

இந்த மாதிரி ஹாரர் படங்களுக்கு இசையும் கிராபிக்ஸும் முக்கியம்... இதுல எப்படி? - கண்டிப்பா. அஜய் ஞானமுத்துவுக்கு இது சவாலான படம். மேக்கிங்காகவும் டெக்னிக்கலாகவும் இந்தப் படம் மிரட்டலா இருக்கும். சாம் சி.எஸ் இசை, கிராபிக்ஸ், ஒளிப்பதிவு இது எல்லாமே பிரம்மாண்டமா இருக்கும். ஹாரர் படம் அப்படிங்கறதால கிராபிக்ஸுக்கு அதிக நாட்கள் தேவைப்பட்டது.

டிசம்பர்ல வெளியிடலாம்னு திட்டமிட்டோம். கிராபிக்ஸுக்காக தள்ளிப் போச்சு. கோடையில வரலாம்னு நினைச்சோம். கிராபிக்ஸ் வேலை முடியலை. பிறகு அது முடிஞ்ச பிறகு, இதுதான் சரியான நேரம்னு இப்ப வெளியிடறோம். பாதி படம் பகல்லயும் மீதி பாதி இரவுலயும் நடக்கிற மாதிரி இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x