Published : 05 Aug 2024 09:48 PM
Last Updated : 05 Aug 2024 09:48 PM

“நானும் பா.ரஞ்சித் படையில் இருப்பதில் பெருமை!” - ‘தங்கலான்’ நிகழ்வில் பார்வதி பேச்சு

நடிகை பார்வதி

சென்னை: “சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது என்பதை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதில் உங்களுக்கு அசவுகரியத்தை கொடுத்தாலும் நீங்கள் அதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். கலை என்பது அரசியல். அதை வழிநடத்தும் ராணுவத் தளபதி பா.ரஞ்சித் என்றால், அவரது படையில் நானும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை பார்வதி, “பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. இதற்கு முன்பு வாய்ப்பு கிடைத்தும் அது கைகூடாமல் போனது. அது காரணம் இருக்கிறது. நான் ‘தங்கலான்’ படத்தின் கங்கம்மாளாகத்தான் நடிக்க வேண்டும் என இருந்திருக்கிறது. ரஞ்சித் நடிக்க அழைத்தபோது, நான் உடனே ஒப்புக்கொண்டேன்.

ஆனால், நிறைய கேள்விகளைக் கேட்டேன். கங்கம்மாள் என்ற கதாபாத்திரம் என்னுடன் எப்போதும் இருக்கும். இதுவரை நான் 30 படங்களில் நடித்துள்ளேன். நிறைய நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஒரு நடிகருக்கு இரக்க குணம் இருக்க வேண்டும். இதெல்லாம் ஒரு குழுவின் உழைப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கான மிகப் பெரிய எடுத்துக்காட்டு விக்ரம் தான் என்று சொல்வேன். கங்கம்மாளின் தங்கலானாக இருந்ததற்கு நன்றி விக்ரம்.

சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். ஆனால், இங்கே எல்லாமே அரசியல்தான். அரசியலற்றது என்று எதுவுமே கிடையாது. தங்கலான் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாவது எதார்த்தமாக நடந்தது அல்ல. சமத்துவமின்மை ஏன் நிலவுகிறது என்பதை நாம் தொடர்ந்து படித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அதில் உங்களுக்கு அசவுகரியத்தை கொடுத்தாலும் நீங்கள் அதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். கலை என்பது அரசியல். அதை வழிநடத்தும் ராணுவத் தளபதி பா.ரஞ்சித் என்றால், அவரது படையில் நானும் இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x