Published : 03 Aug 2024 09:10 AM
Last Updated : 03 Aug 2024 09:10 AM

நடிகர்கள் - தயாரிப்பாளர்கள் மோதல் முற்றுகிறது

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய கூட்டுக் கூட்டத்தில், ‘‘ஆக.16 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும். நவ.1 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படும்.

நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருப்பதால் அவர் நடிக்கும் புதிய படங்களின் பணிகளைத் தொடங்கும் முன் தயாரிப்பாளர்கள், சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தனுஷ் மீது எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் நடிகர் சங்கம் கூறியது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் தயாரிப்பாளர் சங்க செயற்குழு நேற்று முன்தினம் கூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவு பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை: தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள். அது உண்மைக்குப் புறம்பானது. கடந்த ஓராண்டுக்கு முன்பு, தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சினை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5-நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றி, அந்த தகவலை நடிகர் சங்கத்துக்கும் தெரியப்படுத்தினோம்.

கடந்த ஓராண்டு காலமாகத் தொடர்ந்து இதுபற்றி சுட்டிக்காட்டி வந்துள்ளோம். நடிகர் சங்கம் இது தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு எந்த தீர்வும் ஏற்படுத்தித் தரவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனைக் காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கையை கண்டனத்துக்குரியது என்று நடிகர் சங்கம் கூறி இருப்பதை வாபஸ் பெற வேண்டும்.

ஓடிடி, சேட்டிலைட் என அனைத்து வியாபார தளங்களிலும் இக்கட்டான சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள், தள்ளப்படுவதை கருத்தில் கொண்டு மேற்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு நடிகர் சங்கமும் ஒத்துழைப்பு வழங்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர்கள் - தயாரிப்பாளர்கள் சங்க மோதல் முற்றியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x