Published : 31 Jul 2024 03:08 PM
Last Updated : 31 Jul 2024 03:08 PM
சென்னை: “அபர்ணதியை இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்தபோது ரூ.3 லட்சம் பணம் கொடுத்தால் தான் வருவேன் என்றார். அவர் அமரும் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளை சொன்னால் சர்ச்சையாகிவிடும்” என தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி பேசியுள்ளார்.
இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘நாற்கரப்போர்’. இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.
இயக்குநரும் அந்த கதையை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். இங்கே வெற்றி தோல்வி என்பது சகஜம். நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்று தான் பார்க்க வேண்டும். அதன் பிறகு அது ரசிகர்கள் கையில். இங்கே நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் முதல் படத்திலேயே நிறைய கசப்பான அனுபவங்களை பெற்றிருப்பார்கள். ஆனால் அந்த அனுபவங்கள் தான் அவர்கள் முதலீடு.
இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிகை அபர்ணதி மிக சிறந்த நடிகை தான். ஆனால் என்ன வருத்தம் என்றால் அவர் இந்த விழாவிற்கு வரவில்லை. நடிகைகள் புரமோஷனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரு சாபக்கேடாகவே மாறிவிட்டது. அபர்ணதியை இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்த போது அதற்கு தனியாக பணம் கொடுக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டுள்ளார்.
இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து நானே அந்த பெண்ணிடம் போன் செய்து பேசினேன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு மூன்று லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று அவர் சொன்னதுடன் அவர் அமரும் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளை எல்லாம் சொன்னால் அது இன்னும் சர்ச்சையாக மாறிவிடும். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து அவரே போன் செய்து, சாரி சார்.. நான் தெரியாமல் பேசி விட்டேன். மன்னித்து விடுங்கள். நான் புரமோஷன் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்று கூறினார்.
ஆனால் இன்று வரவில்லை. கேட்டதற்கு அவுட் ஆப் ஸ்டேஷன் என்று கூறி விட்டார்கள். தமிழ் சினிமாவிற்கு இப்படிப்பட்ட நடிகைகளே தேவையில்லை. அவர் அப்படியே அவுட் ஆப் ஸ்டேஷனிலேயே இருக்கட்டும். உள்ளே வர வேண்டாம். அதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது. இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவிற்குள் வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள். இந்த படத்திற்கு தொடர்பே இல்லாதவர்கள் கலந்துகொண்டிருக்கும்போது படத்தில் நடித்த நடிகைக்கு இதில் கலந்து கொள்வதில் என்ன சிரமம் ?
சமீபத்தில் கூட இயக்குநர் மீரா கதிரவனின் ஒரு படம் பார்த்தேன். இப்போதே குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நாற்கரப்போரில் பேசப்பட்டிருக்கக் கூடிய அரசியல் எனக்கு பிடித்திருக்கிறது. நான் எப்போதுமே பத்திரிக்கையாளர்களுடன் நெருங்கி அண்ணன் தம்பியாக பழகக் கூடியவன். ஆனால் சமீப காலமாக ஒரு வார இதழில் என்னுடைய ‘வணங்கான்’ படத்தை பற்றி தொடர்ந்து தவறான விஷயங்களாகவே வந்து கொண்டிருக்கிறது. எனக்கும் இயக்குநர் பாலாவுக்கும் பிரச்சினை, அதுவும் பணத்தினால் என்று சொல்கிறார்கள். உண்மையிலேயே அது எங்களை காயப்படுத்துகிறது” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT