Published : 29 Jul 2024 04:09 PM
Last Updated : 29 Jul 2024 04:09 PM
சென்னை: “திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளங்களில் வெளியிட வேண்டும். நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும்” உள்ளிட்ட தீர்மானங்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களுக்கு பணி புரியாமல் புதிதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுகிறார்கள். இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால், இனிவரும் காலங்களில் எந்த ஒரு நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்று இருந்தால் அந்த திரைப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் பேசி முடிக்கப்பட்டது.
நடிகர் தனுஷ் அவர்கள் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல திரைப்படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் என்பதால் வருகிற 16.8.2024 முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது படபடப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை வருகிற அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருப்பதால் அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி உள்ளது. அதனால் வருகிற 01.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இனி வரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளடக்கிய கூட்டுக் குழு (Joint Action Committee) அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment