Published : 25 Jul 2024 10:46 AM
Last Updated : 25 Jul 2024 10:46 AM
பத்திரிகையாளராக தனது பயணத்தை தொடங்கியவர் இயக்குநர் மகேந்திரன். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் கண்டெடுப்பான அவர், 1960-களின் பிற்பகுதியில் திரையுலகில் பயணிக்கத் தொடங்கினார். தீவிரமான வாசிப்பும் எழுத்தும் கதையாசிரியராக அவருக்கான அடுத்தடுத்த வாய்ப்பை உருவாக்கித் தந்தன.
வாசிப்பில் தன்னை வெகுவாக ஈர்த்த கதைகளை படமாக்கவே விரும்பினார் மகேந்திரன். 12 ஆண்டு கால திரையுலக அனுபவம், அவருக்கு ஒரு சினிமா எப்படி இருக்கக் கூடாது என்பதை தெளிவாக கற்றுக் கொடுக்கிறது. மிகைப்படுத்துதலை விட இயல்பே அழகானது என்பதை திரைமொழியாக கையாண்டவர்களில் இயக்குநர் மகேந்திரன் மிகவும் முக்கியமானவர்.
நாடகத் தன்மையும், நாயக வழிபாடுமாய், ஒப்பனைக்குள் ஒளிந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்கு, மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை கலை வடிவமாக்குவதை கற்பித்தவர். அதனால்தான் 'முள்ளும் மலரும்' , 'உதிரிப்பூக்கள்' போன்ற திரைப்படங்கள் கல்ட் க்ளாஸிக் (Cult Classic) ஆக காலம் கடந்து நிற்கின்றன.
தமிழ் சினிமாவின் கிளாசிக் பட வரிசைகள் மகேந்திரனின் படங்கள் இல்லாமல் முழுமைபெறாது. அந்தளவுக்கு அவரது திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் பொதிந்து கிடப்பவை. சினிமா லாபம் ஈட்டும் தொழிலாக அறியப்பட்ட காலத்திலேயே தனது படைப்பில் சமரசம் செய்து கொள்ளாத பெருங்கலைஞன். தனது திரைப்படங்களை புரிந்துகொள்ள முடியாத தயாரிப்பாளர்களின் சாபங்களையும், கோபங்களையும், கனத்த மவுனத்தால் உடைத்தெறிந்த உன்னத படைப்பாளி அவர்.
ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் பாலச்சந்தர் நடிகர் ரஜினிகாந்திடம், “நீ நடித்ததில் உனக்கு பிடித்த படம் எது?” என்று கேட்பார். 'முள்ளும் மலரும்' என்று ரஜினி உடனடியாக பதிலளிப்பார். அந்தப் படத்தில் ரஜினிதான் நடிக்க வேண்டும் என்பதில் இறுதிவரை உறுதியாக நின்றவர் இயக்குநர் மகேந்திரன். 1975-ல் அறிமுகமான ரஜினி ஆபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, காயத்ரி, 16 வயதினிலே, பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிடுகிறார். 1978-ல் தான் மகேந்திரன் தனது முதல் படத்தை இயக்குகிறார். ஆனால், அவர் தான் மேற்சொன்ன படங்களில் எல்லாம் வெளிப்படாமல் ரஜினிக்குள் மறைந்து கொண்டிருந்த நடிகனை வெளிக்கொணர்ந்தார்.
'முள்ளும் மலரும்', 'ஜானி' மற்றும் 'கை கொடுக்கும் கை' என ரஜினியை தனது மூன்று படங்களில் இயக்கினார் இயக்குநர் மகேந்திரன். மற்ற இயக்குநர்கள் எல்லாம் ரஜினியிடம் தென்பட்ட நடிப்பு பொறியை புகைப்பிடிக்க போதுமென நினைத்திருந்தபோது, அதை இரவு முழுவதும் அணையாது எரியும் விளக்கொளியாக பயன்படுத்திக் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன்.
ரஜினி கையும் காலும் ஸ்டைல் காட்டினால் போதுமென்று புளங்காகிதம் அடைந்தவர்களுக்கு மத்தியில், ஒற்றை கையை இழந்தவராக நடிக்க வைத்து நடிப்பில் அவரை உச்சம் தொட வைத்தவர் இயக்குநர் மகேந்திரன். ஸ்டைலாக சிகரெட்டைப் பற்ற வைத்தபடி படபடவென பேசிக் கொண்டிருந்த ரஜினியை, கண்களில் கோபம் கண்ணீராய் கொப்பளிக்க, "ரெண்டு கையும், காலும் இல்லாட்டிகூட இந்த காளி பொழச்சுக்குவான் சார்... கெட்ட பய சார், இந்த காளி" என்ற வசனத்தை பேச வைத்து அந்தக் காட்சியை காண்போரை ஆர்ப்பரிக்கச் செய்திருப்பார் இயக்குநர் மகேந்திரன்.
அதற்கு முன் வந்த ஒருசில படங்களைத் தவிர பெரும்பாலும் ரஜினி கோட் சூட் அல்லது பேண்ட் சட்டை அணிந்த டிப்டாப் மனிதராகவே வந்திருப்பார். 'முள்ளும் மலரும் ' திரைப்படத்தில் இயக்குநர் மகேந்திரன் அவரை காக்கி சீருடை அணிந்த வின்ச் ஆபரேட்டராகவும், லுங்கி அணிந்தபடி ஊருக்குள் இருக்கும் கடையின் முன்பு அரட்டை அடித்தபடி நாட்டமைத்தனம் செய்து கொண்டிருக்கும் சாதாரண மனிதராக வெகு இயல்பாக காட்சிப்படுத்தியிருப்பார். வெள்ளையாக தெரிந்தால்தான் நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற எழுதப்படாத சினிமா விதியை மாற்றி, கருப்பாக இருந்தாலும் மக்களின் அபிமானங்களைப் பெற முடியும் என்பதை மேக் அப்பே இல்லாத ரஜினியை வைத்து மெய்பித்திருப்பார் மகேந்திரன். காதல், பாசம், உறவு, ஈகோ, ஊர், மக்கள் என இப்படத்தில் வரும் அனைத்தையும் வெகு இயல்பாக நகர்த்திக் கொண்டு போயிருப்பார் இயக்குநர்.
இயக்குநர் மகேந்திரன் 1980-ல் ரஜினியுடன் மீண்டும் இணைந்த படம் 'ஜானி'. இம்முறை ரஜினியை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கியிருந்தார் மகேந்திரன். ஒரு க்ரைம் த்ரில்லர் ஜானரில் ரஜினியை வைத்து விஷுவல் விருந்து படைத்திருப்பார் இயக்குநர். ஜானி, வித்யாசாகர் என்ற இரட்டை கதாப்பாத்திரங்களில் ரஜினியின் நடிப்புக்கு தீனிபோட்ட திரைப்படம் என்றாலும், ஆங்காங்கே இயக்குநர் மகேந்திரனின் டச் படம் பார்ப்பவர்களை வசீகரிக்கும். குறிப்பாக, ரஜினிகாந்த் ஸ்ரீதேவி லவ் புரொபோசல் காட்சி. உண்மையை வெளிப்படையாக சொல்ல முடியாத ரஜினி, ஸ்ரீதேவியை சமாளித்து ஆற்றுப்படுத்தும் காட்சி ஹாட்டின் எமோஜிகளை அள்ளித்தெளிப்பவை. காதல் வெளிப்படும் தருணத்தைவிட அதைச் சொல்லும் விதம் பேரழகானது.
அந்தக் காட்சியை ஓர் உரையாடலாக கோத்திருப்பார் மகேந்திரன். இருவரும் பேச துவங்கி சில நிமிடங்கள், ஒரு கடிகாரத்தின் க்ளிக், க்ளிக் என்ற சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். ஸ்ரீதேவியின் புரொபோசலை மறுத்து அவரது இருக்கைக்குப் பின் சென்ற ரஜினி தனது நிலையை கூறும்போது மெலிதாக பின்னணி இசை துணைசேரும். ஒரு வழியாக ரஜினியும் காதலுக்கு சம்மதம் கூறிவிட்டு, ஸ்ரீதேவி அருகில் வந்து ஆனால் ஆரம்பத்துல படபடான பேசிட்டீங்களே... என்னப்பத்தி அது இதுனு.. நான் அப்டியெல்லாம் நெனக்கிறவனா? ஏன் அப்டிலாம் பேசிட்டீங்க? என்பார். அதற்கு ஸ்ரீதேவி நான் அப்டிதான் பேசுவேன் என்பார். உடனே ஏன்? ஏன்? ஏன்? என்றதும் ஸ்ரீதேவி ஒரு சின்ன ரியாக்ஷன் கொடுத்துவிட்டு, ரஜினியை பார்த்துவிட்டு இருவரும் சிரிக்கும் போது பியோனா வெட்கத்தில் சினுங்கும். அந்தக் காட்சி, ஒரு முழு கவிதை நூலை வாசித்தது போன்ற உணர்வை தரும்.
அதேபோல், தீபாவிடம் வித்யாசாகர் கதாப்பாத்திரத்தில் வரும் ரஜினி பேசும் ஒரு வசனம் வரும், ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ.. இந்த ஒலகத்துல எதை எடுத்தாலும் ஒன்னவிட ஒன்னு பெட்டராகத்தான் இருக்கும்... அதுக்கு ஒரு முடிவே இல்ல... அதுக்காக நம்ம மனச மாத்திக்கிட்டே போகக்கூடாது... என்று கூறுவார். இயக்குநர் மகேந்திரனின் பேனா வலிமையை, படம் வெளிவந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட பாதிக்கப்பட்டவர்களின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் இன்றளவும் பார்க்க முடிகிறது.
1984-ல் ஈஸ்வரசந்திரா என்பவர் எழுதி, இயக்குநர் மகேந்திரனின் திரைக்கதை, டைரக்சனில் வெளிவந்த திரைப்படம் 'கை கொடுக்கும் கை'. இந்தப் படம் வெளிவரும் போதெல்லாம் ரஜினி சூப்பர் ஸ்டாராக மாறிவிட்டார். இருந்தாலும் குடும்ப பாங்கான இப்படத்தில் நடித்திருந்தார். ரஜினியின் அன்றைய நிலைக்கேற்ப படத்தில் ஒன்றிரண்டு சமரசங்கள் இருந்தாலும், படம் வணிக ரீதியான வெற்றியை பெறவில்லை.
நடிகர் ரஜினியை வைத்து கமர்ஷியல் படங்களை எடுக்க விரும்பாதவர் இயக்குநர் மகேந்திரன். வெறும் ஸ்டைல் மன்னனாக மட்டுமே ரஜினியை பார்த்தவர்களுக்கு மத்தியில், அவருக்குள் இருந்த நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்தவர். அதேநேரம் 1978, 1980 மற்றும் 1984 ஆகிய ஆண்டுகளில் திரையுலகில் ரஜினி எட்டியிருந்த உயரத்துக்கு சற்றும் குறைவின்றி அவருக்கான ஸ்பேஸை தன்னுடைய படங்களில் அவருக்கு கொடுத்த ஆகச்சிறந்த படைப்பாளி அவர்.
எல்லோரும் செல்கிறார்கள் என்பதற்காக இல்லாமல் தனக்கான தனிப்பாதையை அமைத்து மிகைப்படுத்ததலை விட இயல்பே அழகானது என்ற வாழ்க்கைத் தத்துவத்தை திரையுலகுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் கற்பித்துச் சென்றவர் இயக்குநர் மகேந்திரன்.
இன்று - ஜூலை 25 - இயக்குநர் மகேந்திரன் பிறந்தநாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT