Published : 18 Jul 2024 06:33 PM
Last Updated : 18 Jul 2024 06:33 PM

“ஆபத்தான வன்முறை சமூகத்தில் வாழ்கிறோம்” - பாடகர் அறிவு வேதனை

சென்னை: “இந்த ஆல்பத்தை உருவாக்க 2 வருடங்கள் எடுத்துக்கொண்டேன். என்னுடைய நோக்கத்தை இந்த ஆல்பம் உங்களுக்கு கடத்தும் என்று நம்புகிறேன். மிகவும் ஆபத்தான வன்முறையான சமூகத்தில் வாழ்கிறோம். அடுத்து கொல்லப்படுவது நானாக கூட இருக்கலாம்” என்று பாடகர் அறிவு பேசியுள்ளார்.

தனி இசைகலைஞரான பாடகர் அறிவின் ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “அறிவு எழுதிய அனைத்து பாடல்களும் சுவாரஸ்யமாகவே இருக்கும். அவருக்குள் அரசியல் தன்மை இருந்தது. அவரிடம் இருந்த அம்பேத்கரிய பார்வை தான் எனக்கு அவருடனான நெருக்கத்தை கூட்டியது. நான் திரைப்படங்கள் எடுக்க தொடங்கும்போது, என்னுடைய கதை வெகுஜன மக்களிடம் தொடர்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் இருந்தது.

அறிவு பாடும் பாடல்களில் இருக்கும் அரசியல் தன்மை மக்களிடம் சென்று சேர ஆரம்பித்துள்ளது. வெகுஜன மக்களிடம் பிரபலமான மீடியம் வழியாக அரசியலை கொண்டு சேர்ப்பதுதான் தொடர்பை ஏற்படுத்தும். தலித் சுப்பையா போன்றோர் மேடையேறி பல பாடல்களை பாடியுள்ளனர். ஆனால் மக்களிடம் அது சென்று சேரவில்லை. வெகுஜன மக்களை தொடர்பு கொள்ள முடிந்தாதால் தான் பாடல்கள் பரவலாக்கப்படும். அறிவு எழுதிய ‘எஞ்சாமி’ பாடல் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணமாக சந்தோஷ் நாராயணனும், பாடகர் தீயின் குரலும், அறிவின் எழுத்தும். அதன் பிறகு சில சிக்கல்கள் ஏற்பட்டு அதனால் அறிவு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார். அதிலிருந்து மீள மிகவும் சிரமப்பட்டார். அதன் வெளிபாடுதான் இந்த 12 பாடல்கள்” என்றார்.

பாடகர் அறிவு பேசுகையில், “எங்கள் ஊர் திருவிழாவின் மக்களிசை கலைஞர்கள் பாடுவார்கள். அதைப் பார்த்தும் கேட்டும் வளர்ந்தவன் நான். நான் தனியிசை கலைஞராக இருப்பதற்கு முக்கியமான காரணம் ‘காஸ்லெஸ் கலெக்டிவ்’. அதற்காக பா.ரஞ்சித்துக்கு நன்றி. விளிம்பு நிலை மக்கள் கோர்ட் போட்டு மேடையில் நிற்கலாம் என்ற உறுதியை கொடுத்தது ‘காஸ்லெஸ் கலெக்டிவ்’. நான் இன்று என்னுடைய பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. நாம் எப்போது கொல்லப்படுவோம் என்று தெரியாத வன்முறையான சமூதாயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சாதிய சமூகம் ஒருவித இறுக்கமான மனநிலையில் வைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இந்த ஆல்பத்தை உருவாக்க 2 வருடங்கள் எடுத்துக்கொண்டேன். என்னுடைய நோக்கத்தை இந்த ஆல்பம் உங்களுக்கு கடத்தும் என்று நம்புகிறேன். மிகவும் ஆபத்தான வன்முறையான சமூகத்தில் வாழ்கிறோம். அடுத்து கொல்லப்படுவது நானாகவோ என்னைச் சார்ந்தவர்களோவோ கூட இருக்கலாம். அந்த பயத்துடனே இருக்க வேண்டியிருக்கிறது. அந்த நிலையிலிருந்து விடுபட வேண்டும். அன்பை மீட்டெடுப்போம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x