Last Updated : 12 Jul, 2024 03:32 PM

4  

Published : 12 Jul 2024 03:32 PM
Last Updated : 12 Jul 2024 03:32 PM

‘இந்தியன் 2’ Review: ஷங்கர் - கமல் கூட்டணியின் ‘ஊழல் ஒழிப்பு’ திரைக்களம் எப்படி?

தமிழ் சினிமா வரலாற்றில் மட்டுமின்றி கமல்ஹாசன், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் திரைப் பயணத்திலும் மிக முக்கியமான படம் ‘இந்தியன்’. இதன்மூலம் தொழில்நுட்பம், திரைக்கதை, மேக்கிங் என பல உச்சங்களை தொட்டிருந்தார் ஷங்கர். காலப்போக்கில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு கிளாசிக் அந்தஸ்த்தை பெற்று விட்ட இப்படம், சமூகத்தில் புரையோடிப் போன ஊழல் என்ற விஷத்தின் பாதிப்பு குறித்து மிக அழுத்தமாக பேசியது. அதன் இரண்டாம் பாகமாக, ஏறக்குறைய 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள ‘இந்தியன் 2’ முந்தைய பாகத்தின் கிளாசிக் அந்தஸ்த்தை தக்கவைத்ததா என்று பார்க்கலாம்.

தன் நண்பர்களுடன் ‘பார்க்கிங் டாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து சமூக பிரச்சினைகளுக்காக, குறிப்பாக ஊழலுக்கு எதிராக பேசி வருகிறார் சித்ரா அரவிந்தன் (சித்தார்த்). தன்னால் எவ்வளவு முயன்றும் ஊழலை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தலைமறைவான சேனாபதி என்கிற ‘இந்தியன்’ தாத்தாவை (கமல்ஹாசன்) வரவழைக்க #ComeBackINDIAN என்ற ஹேஷ்டேகை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்கிறார்.

தைவான் நாட்டில் வர்மக் கலையை பயிற்றுவிக்கும் சேனாபதி, சைடில் ஊழல் செய்துவிட்டு அந்தப் பணத்தில் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற பணக்காரர் ஒருவரை கொலை செய்கிறார். பின்னர் இந்தியா திரும்பி வரும் அவர், போலீஸ் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தொடர்ந்து ஊழலுக்கு எதிராக சில கொலைகளைச் செய்கிறார். இன்னொரு பக்கம் பாபி சிம்ஹா தலைமையிலான போலீஸ் குழு சேனாபதியை துரத்துகிறது. இறுதியில் போலீஸால் இந்தியன் தாத்தாவை பிடிக்க முடிந்ததா? தாத்தா ஊழலை ஒழித்தாரா என்பதை நோக்கிய நீண்ட நெடிய பயணமே திரைக்கதை.

’இந்தியன்’ முதல் பாகத்தின் மிகப் பெரிய வெற்றி சாத்தியமானதற்கு முக்கியக் காரணம், அப்படம் நாட்டின் மூலை முடுக்குகளில் கூட நடக்கும் சின்னச் சின்ன ஊழலின் மூலம் எளிய மக்கள் அனுபவிக்கும் வலியை அப்படியே கண்முன் நிறுத்தியதுதான். குறிப்பாக, அந்தப் படத்தின் தொடக்கத்தில் மனோரமா வரும் காட்சி, அதைத் தொடர்ந்து சேனாபதியின் என்ட்ரி என தொடக்கமே நம்மை உள்ளே இழுத்துவிடும்.

ஆனால், ‘இந்தியன் 2’ படத்தில் பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான அம்சங்கள் எதுவும் இல்லாதது மிகப் பெரிய குறை. இந்தியன் தாத்தாவால் கொல்லப்படும் நபர்கள் செய்த ஊழல் என்ன, எதற்காக அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்கிற விவரிப்புகள் கூட இல்லாத நிலையில், அந்தச் சம்பவங்கள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

படம் தொடங்கியது முதலே எந்தவித ஒட்டுதலும் இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கைத்தனங்களுடன் செல்கிறது. அதிலும் முதல்முறையாக தைவானில் இந்தியன் தாத்தா செய்யும் கொலைச் சம்பவம்மிகவும் சலிப்படையச் செய்கிறது. முதல் பாகத்தில் அமைதியாக, அதே நேரத்தில் அதிரடி காட்டும் இந்தியன் தாத்தா, இதில் பேசுகிறார் பேசுகிறார் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறார். இது இல்லாமல் வர்மக் காலை என்ற பெயரில் அவர் செய்யும் சில சேஷ்டைகள் சிரிப்பை வரவழைக்கின்றன.

ஊழலை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட கதையின் தொடக்கத்திலேயே தூய்மைப் பணியாளர்கள், சாலையின் ஓரத்தில் சிறுநீர் கழிப்பவர்களை எல்லாம் ஏதோ சமூக விரோதி போல சித்தரிப்பதும், இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளும் ஏற்கத்தகுந்தவையாக இல்லை.

வர்மக் கலையில் புதுமையை சேர்க்கிறேன் பேர்வழி என்று வில்லன்களை பாட்டு பாடவைப்பது, ஆணை பெண் போல நடந்துகொள்ள வைப்பது, குதிரை போல ஓடச் செய்வது என காமெடி செய்திருக்கிறார்கள். வர்மக் கலை என்றால் என்னவென்று 90ஸ் கிட்ஸுக்கு அறிமுகம் செய்த ‘இந்தியன்’ கதாபாத்திரத்தை வைத்தே அதனை ஸ்பூஃப் செய்திருக்க்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

முந்தைய பாகத்தில் இருந்த குறிப்பிடத்தகுந்த அம்சமான எமோஷனல் காட்சிகளும் இதில் சுத்தமாக மிஸ்ஸிங். அதற்காக வைக்கப்பட்ட காட்சிகளும் வலிந்து திணிக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. குறிப்பாக, சித்தார்த்தின் சிறுவயதில் அவர் அம்மா திருப்பதியில் முட்டி போட்டு படியேறுவதாக வைக்கப்பட்ட காட்சி எதற்கு? அதுபோல தேவையே இல்லாமல் படத்தில் ஒரு மரணக் காட்சி வேறு.

இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன். ப்ராஸ்தட்டிக் மேக்கப்பின் தயவால் எந்த இடத்திலும் கமலின் நடிப்பை உணரமுடியவில்லை. அவரது மேக்கப் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. சித்தார்த், பிரியா பவானி சங்கர், ஜெகன், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு என அனைவரும் தங்கள் வேலையை முடிந்தளவுக்கு சரியாக செய்திருக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா எதற்காக இருக்கிறார் என்றே தெரியாமல் ஒரு வில்லன் கேரக்டரில் வந்து செல்கிறார். ரகுல் ப்ரீத் சிங்குக்கும் வேலை இல்லை.

’அந்நியன்’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் - விவேக் கூட்டணி போல இதிலும் பாபி சிம்ஹா - விவேக் கூட்டணியை கொண்டு வர முயன்றுள்ளது தெரிகிறது. ஆனால் அதில் இருந்த சுவாரஸ்யம் இந்தக் கூட்டணி வரும் காட்சிகளில் இல்லை என்பதால் சுத்தமாக எடுபடவில்லை. அதேபோல கிரியேட்டிவிட்டிக்கு பேர்போன ஷங்கர், இந்தப் படத்தில் இந்தியன் தாத்தா செய்யும் கொலை தொடர்பான காட்சிகளில் எந்தவித புதுமையையும் நிகழ்த்தாதது பெரும் குறை.

எந்தவித சிக்கல்களும் இல்லாமல் எல்லா இடங்களிலும் இந்தியன் தாத்தா நுழைந்து விடுகிறார். அது தலைமைச் செயலகமாக இருந்தாலும் சரி, பெரும் தொழிலதிபர்களின் இருப்பிடமாக இருந்தாலும் சரி. அவருக்கு யார் உதவுகிறார்கள்? அல்லது ஏதேனும் உத்திகளை கையாண்டு அப்படி நுழைகிறாரா என எதுவும் தெரியவில்லை.

வர்மம் - கர்மம் வசனங்கள், லஞ்சம் வங்கும் இன்ஜினியர் பெயர், ‘பொறி.கி.கதிர்வேல்’ என பீறிட்டு வந்திருக்கும் கிரியேட்டிவிட்டியை திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம். முந்தைய பாகத்தில் வசனங்கள் ஒரு பாசிட்டிவ் அம்சம். ஆனால், இதில் எந்த இடத்திலும் வசனங்கள் ஈர்க்கவில்லை.

அனிருத் தனது பின்னணி இசை மூலம் படத்துக்கு வலுசேர்க்க முயன்றிருக்கிறார். எனினும், முந்தைய பாகத்தின் இசை வரும் இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மானை ஹெவியாக மிஸ் செய்ய முடிகிறது. பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால், அவற்றை படத்தில் வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

படத்தின் மூன்று மணி நேர நீளம் மற்றுமொரு மிகப் பெரிய குறை. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சி இழுத்துக் கொண்டே செல்வது கொட்டாவியை வரவழைத்து விடுகிறது. படத்தின் இறுதியில் வரும் அடுத்த பாகத்துக்கான ட்ரெய்லர் எல்லாம் எந்தவித உற்சாகத்தையும் அளிக்கவில்லை.

பிரம்மாண்டம் என்ற பெயரில் தங்க அறை, வைரம் பதிக்கப்பட்ட ஆமை, தண்ணீர் மீது நடனம் என தேவையே இல்லாத செலவுகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை திரைக்கதைக்கு கொடுத்திருந்தால், ஊழல் ஒழிப்பு என்ற களத்தில் ‘நின்று’ ஆடியிருக்கலாம். ஆனால் கிரியேட்டிவிட்டி, புதுமை என்ற வஸ்துக்கள் கிஞ்சித்தும் இல்லாமல் மொத்தமாக கோட்டை விட்டிருக்கிறது படக்குழு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x