Published : 10 Jul 2024 08:46 AM
Last Updated : 10 Jul 2024 08:46 AM
இந்தியாவில் சினிமா தொடங்கிய காலகட்டங்களில் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள் அதிகம் படமாக்கப் பட்டு வந்தன. இதில் ராமாயணக் கதையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறுதிரைப்படங்கள் உருவாகின. இப்போது கூட ரன்பீர் சிங், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதை படமாகி வருகிறது.
இந்நிலையில், ராமாயண கதையை கொண்டு ‘சேது பந்தனம்’ என்ற படம் தமிழில் உருவானது. இதற்கு ‘சேது பந்தன்’ என்று மற்றொரு தலைப்பையும் வைத்திருந்தனர். ஓரியன்டல் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பத்மநாபன் தயாரித்து இயக்கினார் இந்தப் படத்தை. இந்திய சினிமாவின் அடையாளமான ராஜா சாண்டோவை பம்பாயிலிருந்து சென்னைக்கு படம் எடுக்க வரவழைத்தவர் இவர்.
சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையை இப்படம் விவரித்தது. சீதையை சந்தித்தபின் முத்திரை மோதிரத்துடன் ராமனிடம்திரும்புகிறான் அனுமன். இங்கிருந்து படம் தொடங்குவது போல கதை அமைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ரங்காச்சாரி, ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜிராவ் ராமராகவும் எம்.எஸ்.மோகனாம்பாள், மண்டோதரியாகவும் ஆஞ்சநேயராக பார்த்தசாரதியும் நடித்தார்கள். அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். அங்கமுத்து தனதுதிரை வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து மாட்டுவண்டியில் ஸ்டூடியோவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிப் படம் வரை அதைக்கடைபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா பாடல்கள் எழுதினார்.
அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது வழக்கம். இந்தப் படத்துடன் ‘ஆசை’ என்றகுறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன் . இக்குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 1937-ம் ஆண்டு இதே நாளில்வெளியான இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இப்போது இதன் பிரின்ட் இல்லை என்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT