Published : 07 Jul 2024 10:45 AM
Last Updated : 07 Jul 2024 10:45 AM

சாவித்திரிக்காக காத்திருந்த ‘வடிவுக்கு வளைகாப்பு’!

‘நால்வர்’ (1953) என்ற தனது நாடகத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஏ.பி.நாகராஜன். அந்தப் படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். ‘மக்களைப் பெற்ற மகராசி’, ‘நல்ல இடத்து சம்மந்தம்’, ‘பெற்ற மகளை விற்ற அன்னை’ உட்பட பல படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய இவர், ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘திருவிளையாடல்’, ‘சரஸ்வதி சபதம்’ உட்பட பல மறக்க முடியாத படங்களை இயக்கியவர்.

இந்த ஏ.பி.நாகராஜன் இயக்குநராக அறிமுகமான படம், ‘வடிவுக்கு வளைகாப்பு’. நடிகர் வி.கே.ராமசாமியுடன் இணைந்து ஸ்ரீலட்சுமி பிக்சர்ஸ் மூலம் இதை தயாரிக்கவும் செய்தார். நண்பர்களான இருவரும் ஏற்கெனவே ‘மக்களைப் பெற்ற மகராசி’யை தயாரித்திருந்தனர்.

‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தில் சிவாஜி, சாவித்திரி, சவுகார் ஜானகி, எம்.என்.ராஜம், வி.கே.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா, எஸ்.வரலட்சுமி, டி.ஆர்.ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். கே.வி.மகாதேவன் இசையில், கண்ணதாசன், ஏ.மருதகாசி, ஏ.எஸ்.நாராயணன் பாடல்கள் எழுதி இருந்தனர்.

‘பிள்ளை மனம் கலங்குதென்றால்’, ‘சாலையிலே புளியமரம் ஜமீன்தாரு வச்ச மரம்’, ‘தாமதம் செய்யாதே தோழி’, ‘சீருலாவும் இன்ப நாதம்’, ‘நில்லடியோ நில்லடியோ ’ என பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தின் பாடல் ஒன்றில்தான் எல்.ஆர்.ஈஸ்வரி, ஹம்மிங் பாடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்த நேரத்தில், வந்தது யாரும் எதிர்பார்க்காத திடீர் பிரச்சினை. நாயகியாக நடித்த சாவித்திரி தாய்மை அடைந்திருந்தார்! சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் படத்துக்குப் பணம் போட்ட வி.கே.ராமசாமிக்கும் ஏ.பி.நாகராஜனுக்கும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என்ற அதிர்ச்சி. அதுவரை தாங்க முடியுமா என்றும் கவலை. படப்பிடிப்பு நின்றுவிட்டது. சாவித்திரி குழந்தைப் பெற்ற பின்தான் தொடங்க முடியும் என்ற நிலை.

இதற்கிடையே சிவாஜிகணேசன், வி.கே.ஆருக்கு யோசனை ஒன்றைச் சொன்னார். “எடுத்தவரை வெட்டிவிட்டு சரோஜாதேவியை நடிக்க வச்சு முடிச்சா என்ன?” என்பது அது. ஏ.பி.நாகராஜன் சம்மதிக்கவில்லை.

இதனால் இந்தப் படத்தை விட்டுவிட்டு வி.கே.ராமசாமி எழுதிய கதையை வைத்து ‘நல்ல இடத்து சம்மந்தம்’ படத்தைத் தயாரித்தார்கள். ஏ.பி.நாகராஜன் திரைக்கதை எழுதினார். எம்.ஆர்.ராதா, சவுகார் ஜானகி நடிக்க, கே.சோமு இயக்கினார். படம் ஹிட்.

பின் ‘வடிவுக்கு வளைகாப்பு’ படத்தில் இணைந்தார் சாவித்திரி. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. 4 வருடங்களுக்குப் பிறகு 1962-ம்ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது, ‘வடிவுக்கு வளைகாப்பு’. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x