Published : 04 Jul 2024 09:29 PM
Last Updated : 04 Jul 2024 09:29 PM

இளையராஜா இசையில் உருவாகும் தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கை பயணம்

சென்னை: தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் புதிய படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்

தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து உருவாகியுள்ள புதிய படம் ‘ஜமா’. இயக்குநர் பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் ‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த ‘Learn & Teach Production’நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

‘ஜமா’ என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கதை தெருக்கூத்து கலைஞர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடக்கும்படி படமாக்கப்பட்டுள்ளதாகவும், நாடகத்தின் போது ஆண் கலைஞர்கள் இந்தக் கலைக்காக பெண் வேடமிடும்போது, அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சி, மனதின் மாற்றங்கள் மற்றும் சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தப் படம் விவரிக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்காக இளையராஜா தெருக்கூத்து இசையை பயன்படுத்தியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘அவதாரம்’ படத்திற்குப் பிறகு இந்த வகையான இசையை அவர் மீண்டும் தேர்வு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர்கள் சேத்தன், அம்மு அபிராமி, ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே.வி.என். மணிமேகலை, காலா குமார், வசந்த் மாரிமுத்து, சிவா மாறன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x