Published : 03 Jul 2024 06:00 PM
Last Updated : 03 Jul 2024 06:00 PM

ஊர்வசி, பார்வதி கதாபாத்திரங்களை வடிவமைத்தது எப்படி? - ‘உள்ளொழுக்கு’ இயக்குநர் விவரிப்பு

சென்னை: “மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என யாருமில்லை. யதார்த்தத்தில் மனிதர்கள் பாதி நல்லவர்களாகவும், பாதி கெட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படியான தன்மை கொண்ட கதாபாத்திரங்களைத்தான் என் படத்தில் உருவாக்கியிருக்கிறேன்” என ‘உள்ளொழுக்கு’மலையாளப் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோ டாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “நல்லவர், கெட்டவர் என்ற நிலையில் என்னுடைய கதாபாத்திரங்கள் இருக்கக் கூடாது என்பதில் நான் தீர்மானமாக இருந்தேன். ஏனென்றால் யதார்த்தத்தில் அப்படியாக யாருமில்லை. எல்லா மனிதர்களும் பாதி நல்லவர்களாகவும், பாதி கெட்டவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

என்னுடைய அம்மாவும், அத்தைகளும் எப்படி ஒரு பிரச்சினையை அவர்கள் கண்ணோட்டத்திலிருந்து எதிர்கொள்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களை பொறுத்தவரை குடும்பம் தான் முதன்மையானது. குடும்பத்தை காக்க அவர்கள் என்னென்ன தியாகங்களை செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.

என் வாழ்க்கையில் நான் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை வடிவமைத்தேன். ஊர்வசியை பொறுத்தவரை அவரது எண்ணம் லீலாம்மா கதாபாத்திரத்துடன் ஒன்றியிருந்தது. ஆனால், பார்வதியின் எண்ணம் அப்படியில்லை. கடந்த கால தலைமுறையினர் தன்னுடைய சந்தோஷத்தை விட குடும்பத்தின் சந்தோஷம் தான் முக்கியம் என கருதினார்கள்.

இன்றைய தலைமுறை அப்படியில்லை. இது படத்தில் சில சுவாரஸ்யமான சூழ்நிலைகளை உருவாக்கியது. இரண்டு பெறும் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். இருவரும் ஒரு டேக் அல்லது அதிகபட்சமாக 2 டேக்கை தாண்டவில்லை.

பல தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தையும், கதாபாத்திரங்களையும் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றனர். படம் வெளியான பின்பு பாசிட்டிவ் விமர்சனங்களால் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வீடும், மழை பெய்யும் அந்த சூழலும் உண்மையில் என் வாழ்வில் நடந்தது. என்னுடைய தாத்தா இறந்தபோது, மழையால் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்கியிருந்தது. தண்ணீர் வடிவதற்கு சில நாட்கள் ஆனது. அதனால் தாத்தாவின் உடலை அடக்கம் செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இந்தச் சூழலை படத்தில் பயன்படுத்திக் கொண்டேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x