Last Updated : 28 Jun, 2024 11:25 PM

1  

Published : 28 Jun 2024 11:25 PM
Last Updated : 28 Jun 2024 11:25 PM

அனுமதியின்றி வர்மக்கலை முத்திரை: ‘இந்தியன் 2’ படத்துக்கு தடை கோரி வழக்கு

மதுரை: ‘இந்தியன் 2’ படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோர் பதிலளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை மாவட்ட 4-வது முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “மஞ்சா வர்ம கலை தற்காப்பு பயிற்சி பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ சினிமாவுக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்ம கலைகளை கற்றுக் கொடுத்தேன்.

எழுத்தாளர் சுஜாதா மற்றும் ஷங்கர் ஆகியோர் கதைக்கு தேவையான இடங்களில் வர்மக் கலை சம்பந்தமான சண்டை முறைகளையும், அது தொடர்பான அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர். அதோடு செயல்முறையாகவும் வர்மக் கலையை செய்து காட்டினேன். பின்பு நடைபெற்ற தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று வர்மா சண்டை காட்சிகளை அமைத்து கொடுத்தேன். அதன் பயனாக படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.

‘இந்தியன்’ படத்தில் வர்மக்கலை சண்டை காட்சிகளில் நான் பயன்படுத்திய முத்திரைகள் அனைத்தும் எனது ‘தொடுவர்மம் 96 வர்மக்கலை’ என்ற புத்தகத்தில் இடம் பெற்ற முத்திரைகளை பயன்படுத்தி காட்சிபடுத்தினேன். இதற்கு முன் வேறு எந்த புத்தகத்திலும் இந்த முத்திரைகள் படங்களுடன் வந்தது இல்லை.

இந்நிலையில் ‘இந்தியன்’ படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்போவதாக செய்தி வெளியானது. பட போஸ்டர்களில் நான் ஏற்கனவே சொல்லி கொடுத்த முத்திரையை பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது.

எனது அனுமதி இல்லாமல் ‘இந்தியன்-2’ படத்தில் வர்மக்கலை முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். என்னிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். எனது பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை. எனவே எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை ‘இந்தியன்-2’ சினிமா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்"
இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு குறித்து பட தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வருகிற 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x