Published : 26 Jun 2024 08:59 PM
Last Updated : 26 Jun 2024 08:59 PM
திருவனந்தபுரம்: படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை பொய்யாக அதிகப்படுத்தி வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு, கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான சவுபின் ஷாயிரின் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படத்துக்கு எதிராக சிராஜ் என்பவர், “படத்தில் நான் ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். ஆனால் சொன்னபடி உரிய லாபத்தை கொடுக்கவில்லை” என தயாரிப்பாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இதில் பணமோசடி நடைபெற்றதாக கூறி ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற மலையாளப் படங்களின் பட்ஜெட் மற்றும் லாப கணக்குகளை அமலாக்கத்துறை கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் தான் கேரள தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், “பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை அதிகரித்துக் காட்டி, ஒட்டுமொத்த திரைப்பட துறைக்கும் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற நடைமுறையில் ஈடுபட வேண்டாம்” என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், “சில தயாரிப்பாளர்கள் படம் வெளியான சில நாட்களுக்கு பல்க் புக்கிங் செய்து, பார்வையாளர்களை கவர பொய்யான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணத்துக்காக பொய்யான திரைவிமர்சனங்களை வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT