Published : 24 Jun 2024 04:16 PM
Last Updated : 24 Jun 2024 04:16 PM
கதைகளின் வழியே மனித உணர்வுகளை நுணுக்கமான அணுகுவதில் புகழ்பெற்றவை மலையாள திரைப்படங்கள். அந்த உணர்வுகளை வெகுஜன ரசனைக்குட்பட்ட சினிமாவாக்கி இந்த ஆண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் மலையாள இயக்குநர்கள். வெறுமனே ‘கமர்ஷியல்’ என்ற புள்ளிக்குள் சிக்கிவிடாமல், அதற்குள் நின்று மனித மனங்களின் ஊசலாட்டத்தை பதிவு செய்திருப்பது தனிச்சிறப்பு.
உதராணமாக ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ வெகுஜன ரசனைக்குட்பட்ட சினிமா என்றாலும் கூட, அதன் இறுதியில் சவுபின் ஷாயிர் கதாபாத்திரத்திடம், ஸ்ரீநாத் பாசியின் தாயார் நன்றி சொல்லும் இடம் உணர்வுப் பாய்ச்சல். ‘மனிதன் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல’ என்ற காட்சி வெகுஜன சினிமாவுக்கான உச்சம் என்றால், இந்த இடம் உணர்வுரீதியான கட்டமைப்பு.
அதேபோல, ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ படம் முழுக்க முழுக்க ஜாலியாக கேளிக்கையுடன் கடக்கும். ஆனால், அதன் இறுதியில் ‘ரங்கா’வின் மனக்குமுறலையும், அடக்க முடியாத ஆதங்கத்தையும் உணர்வுகளின் வழியே பின்னியிருப்பார்கள். இந்த வெகுஜன + உணர்வுக் கடத்தலைக் கொண்டு இந்த ஆண்டில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது மலையாள திரையுலகம்.
மலையாள சினிமாவின் பான் இந்தியா சம்பவம்: இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில், எமோஷனல் வேணுமா எமோஷனல் இருக்கு, த்ரில்லர் வேணுமா த்ரில்லர் இருக்கு, கன்டென் வேணுமா அதுவும் இருக்கு, வெகுஜன ரசனை என எல்லாவற்றையும் தனித்தனியாக படையலிட்டு இருக்கிறார்கள். இந்த ஆண்டின் தொடக்கமே வினய் ஃபோர்ட்டின் ‘ஆட்டம்’ படத்துடன் அசத்தலாக தொடங்கியது. பாலியல் துன்புறுதலுக்கு ஆளான பெண்ணின் நீதி கோரும் போராட்டத்தில் ஆண்மனங்களின் அசிங்கத்தை பேசியது. ஜெயராமின் ‘ஆபிரகாம் ஓஸ்லர்’ த்ரில்லர் களத்தில் பாஸ் மார்க் வாங்கியது. லிஜோ ஜோஸ் - மோகன்லாலின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ சறுக்கியதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
பிப்ரவரியில் ஒரு ருத்ரதாண்டவத்தையே நிகழ்த்திக் காட்டினார்கள். டோவினோ தாமஸின் ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’ தொடங்கி, நட்சத்திர அந்தஸ்தில்லாத வளரும் நடிகர்களை கொண்டு உருவான ‘பிரேமலு’, மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ இறுதியில் தான் வந்தார் விநாயக் என்பதுபோல சவுபின் ஷாயிரின் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ என மிரட்டினார்கள்.
இதில் குறிப்பாக ‘பிரேமலு’ படத்தின் ஹைதராபாத் களத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களையும், ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட ‘குணா’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களையும், ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ பெங்களூரு கதைக்களம் மூலம் கன்னட ரசிகர்களையும் ஈர்த்து உண்மையான ‘பான் இந்தியா’ முயற்சியை நிறுவியது அசத்தல் ரகம்!
நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திலீப்பின் ‘தங்கமணி’ நல்ல முயற்சி தான் என்றாலும் கைகொடுக்கவில்லை. பிருத்விராஜின் ஜீவிதம் மிக்க உழைப்புக்காகவே ‘ஆடு ஜீவிதம்’ படம் கவனம் பெற்றது. வினீத் ஸ்ரீனிவாசனின் ‘வர்ஷங்களுக்கு சேஷம்’ வரவேற்பை பெற்றது. ‘குருவாயூர் அம்பல நடையில்’ படத்தின் ஜாலியான கதைக்களத்தில் மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்தார் பிருத்விராஜ்.
மம்மூட்டியின் ‘டர்போ’ நஷ்டமில்லாத வெற்றி. பிஜு மேனன், ஆசிஃப் அலியின் ‘தலவன்’ படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிட்டியது. தற்போது வெளியாகி திரையிடப்பட்டுக்கொண்டிருக்கும் ஊர்வசி - பார்வதியின் ‘உள்ளொழுக்கு’ அழுத்தமான கன்டென்ட் படைப்பு.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டோவினோ தாமஸின் ‘நடிகர்’ மற்றும் ‘ஜன கன மண’ பட இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நிவின் பாலி நடித்த ‘மலையாளி ஃப்ரம் இந்தியா’ வசூலிலும், விமர்சனத்திலும் பின்தங்கியது.
பாக்ஸ் ஆஃபீஸ் மிரட்டல்: கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராகேஷ் கூறுகையில், “இந்த 6 மாதம் என்பது மலையாள சினிமாவில் கோல்டன் பீரியட். மொத்தமாக ரூ.1000 கோடி வரை வசூலாகியுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கு பேசும் மாநிலங்கள் மற்றும் பிற மாநில பார்வையாளர்கள் மலையாள சினிமாவை ஏற்றுக்கொண்டிருப்பதன் வெளிப்பாடு தான் இது. முன்னதாக அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் மலையாளிகள் மட்டுமே படங்களைப் பார்க்கும் நிலை இருந்தது. தற்போது அனைத்து பார்வையாளர்களுக்குமானதாக மாறியிருக்கிறது. இந்த மாற்றம் மலையாள திரைப்படங்களுக்கான புதிய சந்தையை உருவாகியுள்ளது” என்றார்.
கடந்த ஆண்டு டோவினோதாமஸின் ‘2018’ படம் ரூ.176 கோடியை வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் சாதனையை படைத்தது. இந்த ஆண்டு ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ அதை உடைத்து ரூ.250 கோடியாக்கியுள்ளது. இதற்கு அனைத்து தரப்பு பார்வையாளர்களின் வரவேற்பே காரணம். ‘ஆடு ஜீவிதம்’, ‘ஆவேஷம்’, ‘ப்ரேமலு’ ஆகிய படங்கள் ரூ.100 கோடி அதிகமான பாக்ஸ் ஆஃபீஸையும், ‘குருவாயூர் அம்பலநடையில்’, ‘பிரம்மயுகம்’, ‘வருஷங்களுக்கு சேஷம்’, ‘டர்போ’, ‘ஆபிரகாம் ஓஸ்லர்’, ஆகிய படங்கள் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கான் சம்பவமும், பெண் கதாபாத்திர இன்மையும்: மலையாள சினிமாவை மெச்சிக்கொண்டிருக்கும் வேளையில், வெகுஜன சினிமாவில் பெண் கதாபாத்திரங்களின் இன்மை என்ற மிக தீவிரமான விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘பிரம்மயுகம்’, ‘ஆடு ஜீவிதம்’, ‘வருஷங்களுக்கு சேஷம்’, ‘அன்வேஷிப்பின் கண்டேதும்’, ‘மலைக்கோட்டை வாலிபன்’, ‘ஆபிரகாம் ஓஸ்லர்’, ‘தலவன்’ என கண்ணுக்கெட்டிய தூரம் வரை பெண் கதாபாத்திரங்களே இல்லை. ‘பிரமேலு’ மட்டும் விதிவிலக்கு. தற்போது ‘உள்ளொழுக்கு’.
அப்படி பெண் கதாபாத்திரங்கள் எங்கே தான் போனார்கள் என தேடினால், அவர்கள் ‘கான் திரைப்பட விழா’வில் சம்பவம் செய்துகொண்டிருந்தார்கள். பெண் கதாபாத்திரங்களை மலையாள சினிமா தவிர்த்த (?) சூழலில், பெண்களை முதன்மை கதாபாத்திரங்களாக கொண்ட ‘ஆல் வி இமேஜின் அஸ் எ லைட்’ (All We Imagine as Light) மலையாள படம் ‘கிராண்ட் பிரி’ விருது கிடைத்தது. இதற்கு மறுபுறம், மேற்கண்ட கதைக்களங்களுக்கு பெண் கதாபாத்திரங்கள் தேவைப்படவில்லை என்ற விவாதத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.
அடுத்த 6 மாதம்: மோகன்லாலின் ‘பரோஸ்’, மம்மூட்டியின் ‘பஸூக்கா’ (Bazooka), பிருத்விராஜின் ‘விலயாட் புத்தா’ (Vilayat Buddha), ஃபஹத் பாசிலின் ‘கராத்தே சந்திரன்’ (karate chandran) உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.
வாசிக்க > ‘அயலான்’ முதல் ‘மகாராஜா’ வரை: தமிழ் சினிமாவில் ஆறுதலும் ஏமாற்றமும் - ஒரு பார்வை | First half of 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT