Published : 24 Jun 2024 11:05 AM
Last Updated : 24 Jun 2024 11:05 AM

திரை விமர்சனம்: பயமறியா பிரம்மை

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கபிலன் (வினோத் சாகர்) பல கொலைகள் செய்த கைதி, ஜெகதீஷை(ஜே.டி ) சிறையில் சந்தித்து உரையாடுகிறார். ஜெகதீஷின் குற்ற வாழ்க்கையை நாவலாக எழுதுவது அவர் நோக்கம். அதன்படியே ‘பயமறியா பிரம்மை’ என்ற தலைப்பில் நாவலும் வெளியாக, அதைப் படிக்கும் சில வாசகர்கள், எதற்காகக் கொலைகளைச் செய்தார், எவ்வாறு செய்தார் என விவரித்த ஜெகதீஷ் போல் தங்களை உணர்கிறார்கள். அது கபிலனின் எழுத்துமொழிக்குக் கிடைத்த வெற்றியா? அல்லது, தான் செய்த கொலைகள் ஒவ்வொன்றும் கலை எனக் கூறும் ஜெகதீஷின் குற்றவுலகம் தரும் தாக்கமா? என்பது கதை.

கபிலனின் விருதுபெற்ற ‘உச்சி முகடு’ என்கிற நாவலைச் சந்திப்புக்கு முன் வாசித்து முடித்திருக்கும் ஜெகதீஷ், ‘அது நீட்டி முழக்கப்பட்ட வெற்றுக் காகிதம்’ என்கிறான். தான் கொலைகளைச் செய்த விதமே சிறந்த படைப்பு; தானே சிறந்த கலைஞன் எனக் கூறுகிறான். ‘சக மனிதர்களைக் கொல்வது கலையாக முடியாது’ என கபிலன் மறுக்க, ஜெகதீஷ், கபிலனின் வாதத்தை எதிர்கொண்டு தகர்க்க முயல்கிறான். இருவருக்குமான மோதலில் இருந்து தொடங்கும் படம், சில கொலைகளை மட்டும் காட்டுவதுடன் முடிந்துவிடுவது நறுக்.நாவலை வாசிக்கும் வாசகர்கள், தங்களை ஜெகதீஷாக உணரும் உத்தி, புதிதாக இருந்தாலும், அதைப் புரிந்து கதையைப் பின்தொடர மிகுந்த கவனம் தேவைப்படுவதுதான் இந்தத் திரைக்கதையின் சிக்கல். அதேபோல், ஜெகதீஷின் வாழ்க்கைப் பின்னணி, மாறன் என்கிற தாதாவிடம் அடைக்கலமாகும் காரணம் ஆகியவற்றை அழுத்தமாக அமைத்திருந்தால் முழுமை கிடைத்திருக்கலாம்.

ஜெகதீஷாக வரும் ஜேடி-யும், கபிலனாக வரும் வினோத் சாகரும் போட்டிப்போட்டு நடித்துள்ளனர். குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், சாய் பிரியங்கா, ஹரிஷ் ராஜு, ஜாக் ராபின் ஆகியோரின் பங்களிப்பு கச்சிதம். மாறனாக வரும் ஏ.கே., ஜான் விஜய் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து, திரைக்கதை எழுதியிருக்கும் அறிமுக இயக்குநர் ராகுல் கபாலியின் துணிவைப் பாராட்டலாம். படத்தொகுப்பைத் திறம்படக் கையாண்ட அகில், ஒளிப்பதிவின் வழி ஜெகதீஷின் உலகை உருவாக்கி இருக்கும் பிரவீன் - நந்தா, பின்னணி இசை தந்திருக்கும் கே ஆகியோரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது.

சோதனை முயற்சிகளையும் எதிர்பார்க்கிறோம் என ஆர்வம் காட்டும் பார்வையாளர்களுக்கு மட்டும் இது ‘பயமறியா பிரம்மை’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x