Published : 20 Jun 2024 05:19 PM
Last Updated : 20 Jun 2024 05:19 PM

“தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” - ஜி.வி.பிரகாஷ் @ கள்ளச் சாராய மரணங்கள்

சென்னை: “தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது” என கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச் சாராய மரணங்கள் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது. இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, நடிகர் விஷால் வெளியிட்டுள்ள பதிவில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச் சாராயத்துக்கு பலி ஆகும் நிகழ்வும், போதைப் பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும், இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவுக்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்’ என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், தமிழக முதல்வர் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x