Published : 17 Jun 2024 04:49 PM
Last Updated : 17 Jun 2024 04:49 PM
பெங்களூரு: “நட்பு வேறு, நீதி வேறு. கொல்லப்பட்ட ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கன்னட நடிகர் தர்ஷனால் கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமி கொலை வழக்கு குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.
தன்னுடைய ரசிகர் ரேணுகாசுவாமியை ஆள் வைத்து கொன்ற குற்றச்சாட்டில் கன்னட நடிகர் தர்ஷன், அவருடைய காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலை வழக்கில் ஜூன் 17-ம் தேதி வரை அவர்களுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்ஷன் உள்ளிட்ட 12 பேர் இந்த கொலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி வந்து சித்திரவதை செய்து காமாட்சிபாளையத்தில் வாய்க்காலில் கொன்று வீசியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரேணுகாசாமி கொலை வழக்கு குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் கூறுகையில், “நட்பு வேறு, நீதி வேறு. கொல்லப்பட்ட ரேணுகாசாமியின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஊர் எதுவாக இருந்தாலும் நீதி கிடைப்பது முக்கியம். சட்டத்தை விட பெரியவர்கள் யாரும் இல்லை. காவல்துறை மற்றும் ஊடகங்கள் உண்மையை வெளிக்கொண்டு வர செயல்படுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகில் நடிகர் தர்ஷனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் கிச்சா சுதீப். இந்தநிலையில் தான் கொல்லப்பட்ட ரசிகருக்கு நீதி வேண்டும் என கிச்சா சுதீப் பேசியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT