Published : 12 Jun 2024 05:53 PM
Last Updated : 12 Jun 2024 05:53 PM

“படத்துக்கு விளம்பரம் கொடுக்க தயாரிப்பாளர் முன்வரவில்லை” - ராமராஜன் குற்றச்சாட்டு

தென்காசி: “எந்தவிதமான விளம்பரமும் இல்லை. பிறகு எப்படி படம் ஓடும். இன்னும் சிறப்பாக ஓட வேண்டிய படத்தை தயாரிப்பாளர் விளம்பரப்படுத்தாமல் விட்டுவிட்டார். எனக்கான சம்பள பாக்கியையும் அவர் கொடுக்கவில்லை” என நடிகர் ராமராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ராமராஜன் கம்பேக் கொடுத்திருக்கும் படம் ‘சாமானியன்’. இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் புரமோஷனில் ஈடுப்பட்டுள்ள நடிகர் ராமராஜன் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள மல்டிபிளக்ஸ் ஒன்றில் தனது ரசிகர்களை சந்தித்தார்.

இதையடுத்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் எளிய மக்களுக்கான பொழுதுபோக்கு சினிமா. அதனால், திரையரங்க உரிமையாளர்கள் சினிமா கட்டணத்தைக் குறைக்க முன்வர வேண்டும். 35 வருடங்களுக்கு முன்பு ‘கரகாட்டக்காரன்’ படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதேமாதிரியான வரவேற்பு இப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருப்பது மகிழ்ச்சி.

இந்த கதைக்கு தேவையான எல்லாவற்றையும் சரியாக செய்து படத்தின் ஆப்ரேஷனை சக்சஸாக முடித்து கொடுத்துவிட்டோம். எல்லாவற்றையும் சரியாக செய்து வெளியே ஒரு குழந்தையாக படத்தை வெளியிட்டோம். ஆனால், வெளியே வந்த குழந்தையை தயாரிப்பாளர் கொன்றுவிட்டார்.

எந்தவிதமான விளம்பரமும் இல்லை. பிறகு எப்படி படம் ஓடும். பேப்பர், டிவி எதிலுமே விளம்பரமில்லை. இதையெல்லாம் தாண்டி மக்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள் என்றால் அது ராமராஜனுக்காக தான். இது என்னுடைய 46-வது படம். ஒன்றரை வருடம் படம் வெளியாவதில் தாமதமானது. எனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியையும் தரவில்லை. இன்னும் பெரிதாக போக வேண்டிய படத்தை தயாரிப்பாளர் சரியாக விளம்பரப்படுத்தவில்லை” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x