Published : 01 Jun 2024 02:27 PM
Last Updated : 01 Jun 2024 02:27 PM

“சட்டத்தால் மட்டும் சாதியக் கொலைகளை தடுத்துவிட முடியாது” - இயக்குநர் மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ்

தூத்துக்குடி: “நாம் சாதாரணமாக சொல்கிறோம். உடனே ஒரு சட்டம் போட்டால் எல்லாவற்றையும் மாற்றிவிடலாம் என்று சொல்கிறோம். அப்படியில்லை. உளவியலாக சாதி மிகவும் கெட்டிப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அரசியல், கலை என அனைத்து தளத்திலும் இணைந்து வேலை பார்த்தால் மட்டுமே அடுத்த தலைமுறையாவது குறைந்தபட்சம் புரிதல் பெறும்” என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்ளைச் சந்தித்த மாரி செல்வராஜிடம் “ஓடிடியால் திரையரங்கில் வந்து படங்களைப் பார்க்கும் மக்கள் கூட்டம் குறைந்துள்ளதா?” என்று கேட்டதற்கு, “எல்லோர் வீட்டிலும் சாமி படம் உள்ளது. பூஜை அறை உள்ளது. ஆனாலும் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவது குறையவில்லை தானே. அப்படித்தான்.

சினிமா என்பது மக்களால் சேர்ந்து கூடிப் பார்ப்பது என்று மாறாது. ஓடிடி என்பது நூலகம் போல. அதில் பார்த்த படத்தை திரும்ப திரும்ப பார்ப்பார்கள். பார்க்காத படத்தையும் அதில் பார்ப்பார்கள். அது ஒரு புத்தகம் போல ஆகிவிட்டது. ஓடிடி அதன் போக்கில் இருக்கும். சினிமா என்றாலே, மக்களுடன் மக்களால் திரையரங்கில் பார்ப்பது என்பதால் அதன் மவுசு குறையாது” என்றார்.

தென் மாவட்டங்களில் சாதிக் கொலைகள் அதிகரித்துள்ளது குறித்து அவர் கூறும்போது, “அடிப்படையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படுகிறது. நிறைய புரிதல்கள் தேவைப்படுகிறது. இளைஞர்களுக்குள்ளேயே விவாதங்கள் தேவைப்படுகிறது. அதை நோக்கி கலையை நகர்த்த வேண்டிய தேவை உள்ளது. உடனே இதனை மாற்றுவது சாத்தியமல்ல. காலம் காலமாக புரையோடிக்கிடக்கின்ற ஒரு விஷயமாக உள்ளது. மிகவும் மெனக்கெட்டு மாற்ற வேண்டிய தேவை உள்ளது.

ஒரு நாளில் மாற்றும் அளவுக்கான சூழல் இல்லை. உளவியலாக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாக சொல்கிறோம். உடனே ஒரு சட்டம் போட்டால் மாற்றிவிடலாம் என்று சொல்கிறோம். அப்படியில்லை. உளவியலாக மிகவும் கெட்டிப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து அரசியல், கலை என அனைத்து தளத்திலும் இணைந்து வேலை பார்த்தால் மட்டுமே அடுத்த தலைமுறையாவது குறைந்தபட்சம் புரிதல் பெறும் என நினைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, “அடுத்து ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமான ‘பைசன்’ படத்தை இயக்கி வருகிறேன். முதல் மாத ஷெட்யூல் முடித்துவிட்டேன். அடுத்த கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது” என்றார். விஜய் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு, “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மகிழ்ச்சியான விஷயம் தான்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x