Published : 15 May 2024 06:42 PM
Last Updated : 15 May 2024 06:42 PM
பிரான்ஸ்: 77ஆவது ‘கான் திரைப்பட விழா’ செவ்வாய்கிழமை மாலை கோலாகலமாக தொடங்கியது. இதில் உலகின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
பிரான்ஸில் உள்ள கான் நகரத்தில் தொடங்கியுள்ள இந்த விழாவானது மே 14 - மே 25 வரை மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் முதல் படமாக பிரெஞ்ச் மொழியின் காமெடி படமான ‘தி செகன்ட் ஆக்ட்’ (The Second Act) (மே 14) திரையிடப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் பிரபல ஹாலிவுட் நடிகை மெரில் ஸ்ட்ரீப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கான் திரைப்பட விழாவின் உயரிய விருதான ‘பால்ம் டி'ஓர்’ (Palme d'Or) விருது அவருக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு கான் 2024 விழாவில் சிவப்பு கம்பளத்தை இந்திய நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், அதிதி ராவ் ஹைதாரி, சோபிதா துலிபாலா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் கலந்துகொண்டு அலங்கரிக்க உள்ளனர்.
பிரெஞ்ச் திரையுலகில் ‘மீடூ’ விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு நடிகை ஜூடித் கோத்ரேஷ் (Judith Godreche) இரண்டு இயக்குநர்களால் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவருடைய ‘Moi Aussi’ படம் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையப் பேசுகிறது இந்தப் படம்.
இந்தியப் படங்கள்: பாயல் கபாடியாவின் ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’, ராதிகா ஆப்தே நடித்த ‘சிஸ்டர் மிட்நைட்’, ஷ்யாம் பெனகலின் ‘மந்தன்’, சந்தியா சுரியின் ‘சந்தோஷ்’, கன்னட படமான ‘Sunflowers Were the First Ones to Know’ உள்ளிட்ட 7 படங்கள் திரையிடப்பட உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT