Published : 07 May 2024 09:19 PM
Last Updated : 07 May 2024 09:19 PM
சென்னை: சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னத்துரையை இயக்குநர் ரஞ்சித் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர் சின்னத்துரை சாதிய வன்கொடுமை காரணமாக சகமாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளஸ் 2 பயின்று வந்த மாணவர் சின்னத்துரைக்கு அவரது ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு சென்று பாடங்களை கற்றுக் கொடுத்தனர். பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த சின்னதுரை, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-க்கு 469 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவரை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். பேனாவை பரிசளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சின்னத்துரை, “என்னை தாக்கியவர்களும் படித்து மேலே வர வேண்டும். எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மாணவர் சின்னத்துரையை இயக்குநர் பா.ரஞ்சித் தனது அலுவலகத்து அழைத்து நேரில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பம் அளித்துள்ளதாக சின்னதுரை தெரிவித்தார்.
இதையடுத்து, “கல்லூரி கட்டணம் மற்றும் எவ்வித உதவியாக இருப்பினும் நீலம் பண்பாட்டு மையம் செய்வதற்கு தயாராக இருக்கிறது” என்று பா.ரஞ்சித் உறுதியளித்தார். முன்னதாக "சாதியை முற்றும் ஒழித்தல்" என்ற நூலினை சின்னதுரைக்கும் அவரின் தங்கைக்கும் ரஞ்சித் பரிசளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT