Published : 07 May 2024 08:06 PM
Last Updated : 07 May 2024 08:06 PM
மயிலாடுதுறை: “டிராக்டர் வாங்கி லோன் கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் படித்துள்ளேன். அது என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதனால், 10 டிராக்டர்கள் வாங்கி அதனை மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறேன்” என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
‘சேவையே கடவுள்’ என்ற பெயரில் அறக்கட்டளையை நடிகர் ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லையாடி வருகை தந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அங்குள்ள பொதுமக்கள், ரசிகர்கள், உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், “பல்வேறு இடங்களில் டிராக்டர் வாங்கி லோன் கட்ட முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் படித்துள்ளேன். அது என்னை வேதனைக்குள்ளாக்கியது. அதனால், 10 டிராக்டர் வாங்கி அதனை மாநிலம் முழுவதும் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறேன்.
இந்தப் பகுதியில் சதீஸ் என்பவருக்கு டிராக்டர் கொடுத்துள்ளேன். இதனை அவர் மட்டுமல்லாமல், இங்கு கஷ்டப்படும் விவசாயிகள் இந்த டிராக்டரை பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லோருக்குமான டிராக்டர் இது. இந்த சேவை குறித்து அறிந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். அது எனக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது” என்றார்.
விஜய்யின் அரசியல் அறிவிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம். மக்கள் விஜய் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். விஜயும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார். நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT