Published : 01 May 2024 06:33 AM
Last Updated : 01 May 2024 06:33 AM

காஞ்சனா: தயாரிப்பாளரிடம் எழுத்தாளர் லக்‌ஷ்மி வைத்த கோரிக்கை

சென்னை: லஷ்மி என்ற பெயரில் ஏராளமான கதைகளையும் நாவல்களையும் எழுதி இருக்கிறார் மருத்துவர் திரிபுரசுந்தரி. நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையை எழுதிய இவரது பல படைப்புகள் வரவேற்பைப் பெற்றன. இவர் எழுதிய நாவல்களில் ஒன்று, ‘காஞ்சனையின் கனவு’. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடம் பிரபலமாக இருந்த இந்தத் தொடர், பின்னர் ‘காஞ்சனா’ என்ற பெயரில் திரைப்படமானது.

இந்தக் கதையை, பக்‌ஷிராஜா ஸ்டூடியோ உரிமையாளரான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு திரைப்படமாக்குவதற்கு வாங்கினார். தொடராக வந்தபோது, வாசகர்கள், கதையில் வரும் இரண்டு பெண் கதாபாத்திரங்களையும் நடிகைகள் லலிதா, பத்மினியை மனதில் வைத்துதான் எழுதினீர்களா? என்று லஷ்மியிடம் கேட்டிருந்தனர். இதனால், கதையை வாங்கிய ஸ்ரீராமுலு நாயுடுவிடம், அந்த இரண்டு பெண் கதாபாத்திரங்களில் லலிதா, பத்மினியையே நடிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், எழுத்தாளர் லஷ்மி. ஒப்புக்கொண்டார் அவர். அதன்படி அவர்களே அந்த கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இதில், கே.ஆர்.ராமசாமி நாயகனாக நடித்தார். வில்லனாக எம்.என்.நம்பியார் நடித்தார். டி.எஸ்.துரைராஜ், கே.துரைசாமி, கே.எஸ்.கண்ணையா, பி.ஏ.தாமஸ், என்.எஸ்.நாராயண பிள்ளை, என்.கமலம் உள்ளிட்டோர் நடித்தனர். ஜமீன்தாரான ஹீரோவுக்கு கெட்ட எண்ணம் கொண்டவன் நண்பனாக இருக்கிறான். அவனால், அவன் குடும்பம் என்னவாகிறது என்கிற லைன்தான் படம்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார். பாபநாசம் சிவன், வி.ஏ.கோபாலகிருஷ்னன், நாமக்கல் ஆர்.பாலசுப்பிரமணியன் பாடல்களை எழுதினர்.

1951-ம் ஆண்டு இதே தேதியில் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியானது. கே.ஆர்.ராமசாமி, லலிதா, பத்மினி உட்பட படத்தில் நடித்தவர்களின் நடிப்புப் பேசப்பட்டது. தமிழை விட மலையாளத்தில் இந்தப் படம் அதிக வரவேற்பைப் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x