Published : 27 Apr 2024 07:06 AM
Last Updated : 27 Apr 2024 07:06 AM
ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில், கடந்த 2019-ம் ஆண்டு, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் கொல்லப்பட் டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இயங்கிவந்த, ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் 300-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து இந்திய எல்லைக்குள், பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அப்
போது இந்திய விமானப்படையின் மிக்-21 ரக விமானம், பாகிஸ்தான் பகுதி கிராமத்தில் விழுந்தது. அதிலிருந்த போர் விமானி அபிநந்தனை பாக். ராணுவம் சிறை பிடித்தது. பின்னர் அவர் பல்வேறு உலக நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து, ‘ரண்ணீதி: பாலகோட் அண்ட் பியாண்ட்’ (Ranneeti: Balakot & Beyond) என்ற பெயரில் வெப் தொடர் உருவாகியுள்ளது. சந்தோஷ் சிங் இயக்கியுள்ள இதில் ஜிம்மி ஷெர்கில், அஷுதோஷ் ராணா, ஆசிஷ் வித்யார்த்தி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜியோ சினிமாவில் தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25-ம் தேதி வெளியானது. இதில் போர் விமானி அபிநந்தனாக, பிரசன்னா நடித்துள்ளார்.
வரவேற்பைப் பெற்று வரும் இதில் நடித்தது பற்றி நடிகர் பிரசன்னாவிடம் கேட்டபோது கூறியதாவது: நிஜ சம்பவத்தின் அடிப்படையில் உருவான வெப் தொடரில் நடித்ததில் மகிழ்ச்சி. அதோடு அபிநந்தன் கேரக்டரில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பெருமையாகக் கருதுகிறேன். வெளியில் தெரிந்த செய்திகளை விடவும் தெரியாத உண்மைச் சம்பவங்களும் இத்தொடரில் இடம்பெற்றுள்ளன. ரஷ்யாவில் இருந்து நாம் வாங்கிய விமானம், மிக்-21. பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானம் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்ட நவீன விமானம். நம் மிக் மூலம் அந்த விமானத்தைத் தாக்கியதை அமெரிக்காவே முதலில் நம்ப மறுத்தது. அது தொடர்பாக நடந்த சம்பவங்கள் உட்பட
பல விஷயங்கள் இத்தொடரில் புதுமையாக இருக்கும்.
பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தன், ராணுவ ரகசியங்கள் கொண்ட ஆவணத்தை, அருகில் கிடந்த தண்ணீரில் முக்கி அழித்தும், பாதியை வாயில்போட்டு விழுங்கியும் மறைத்தார். இந்தக் காட்சியைக் காஷ்மீரில் மைனஸ் 4 டிகிரி குளிரில் படமாக்கினார்கள். 4 நிமிட காட்சி அது. ஆற்றுக்குள் விழுந்து எழுவது போன்ற அந்தக் காட்சியில் நடிக்கும்போது, உடலே மரத்துவிட்டது. உடனடியாக வெளியில் வந்து மூட்டப்பட்ட தீயினருகே அமர்ந்து சூடேற்றுவார்கள். இதை 8 டேக் வரை எடுத்தார்கள். நம் ராணுவ வீரர்களை நினைத்தே அந்தக் கடும் குளிரைத் தாங்கிக்கொண்டு நடித்தேன். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய சிலரை நேரில் சந்தித்தபோது, உடல் சிலிர்த்தது. இந்த வெப் தொடர் கண்டிப்பாக ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும். இவ்வாறு பிரசன்னா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment