Published : 26 Apr 2024 09:36 AM
Last Updated : 26 Apr 2024 09:36 AM

“எதற்கு தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள்?” - நடிகர் விஷால் காட்டம்

சென்னை: எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று நடிகர் விஷால் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

விநியோக தொகை பாக்கியை செலுத்தினால்தான் திருச்சி, தஞ்சை பகுதிகளில் தனது ’ரத்னம்’ படத்தை வெளியிடுவோம் என்று அப்பகுதி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நேற்று (ஏப்.25) நடிகர் விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று ‘ரத்னம்’ படம் வெளியீட்டை முன்னிட்டு அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “ஒருவழியாக கட்டப் பஞ்சாயத்து எந்தவித பயமோ, நெருடலோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமா மற்றும் அதன் தயாரிப்பாளர்கள் குறிப்பாக இந்த ஆண்டு ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்தில் இருப்பதே அதன் அர்த்தம்.

அன்பான திருச்சி, தஞ்சாவூர் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களே, கங்காரு நீதிமன்றங்கள் இன்னும் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தியதன் மூலம், ஒரு மிகப்பெரிய தாக்கத்தை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். ஆனால் இது என்னைப் போன்ற ஒரு போராளியுடன் முடிந்து போகும்.

கொஞ்சம் தாமதம் ஆனாலும், உங்களை நான் சட்டத்தின் உதவியுடன் கீழிறக்குவேன். ஏனெனில் எல்லா தயாரிப்பாளர்களுக்கும் குடும்பம் இருக்கிறது, அவர்கள் யாரும் பொழுதுபோக்குக்காக படம் எடுக்க வரவில்லை என்று நான் நம்புகிறேன். பல்வேறு தயாரிப்பாளர் சங்கங்களுக்கு நன்றி. எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம். உங்கள் அனைவருக்கும் இது வெட்கக்கேடு.

நடிகர் சங்க பொதுச் செயலாளராகவோ அல்லது ஒரு நடிகனாகவோ அல்லது தயாரிப்பாளராகவோ அல்ல. ஒரு முன்னாள் தயாரிப்பாளரின் மகனாக, வியாழக்கிழமை மாலை, தன்னுடைய குழந்தையை பார்வையாளர்களுக்கு சமர்ப்பிக்க காத்திருப்பது எப்படி இருக்கும் என்பதை பார்த்ததன் மூலம் இதனை எழுதுகிறேன்” என்று விஷால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x