Published : 24 Apr 2024 07:45 PM
Last Updated : 24 Apr 2024 07:45 PM
சென்னை: எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ படத்தின் டீசர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. ‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்டன் மகன்’, ‘நான் மகான் அல்ல’ உட்பட சுமார் 10 படங்களுக்கு வசனம் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘வடக்கன்’. குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரிக்கும் இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜே.ஜனனி இசை அமைத்துள்ளார். ரமேஷ் வைத்யா பாடல்கள் எழுதியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி? - தொடக்கத்திலேயே ‘ஆம்பள சிங்கம்’ என்ற வசனம் இடம்பெறுகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு சிங்கங்களுடன் ஆணை ஒப்பிட்டு வீரத்தை பறைசாற்றும் மறைமுக ‘ஆணாதிக்க’ பதங்கள் பயன்படுத்தப்படும் என தெரியவில்லை. அடுத்து ‘எங்க பாத்தாலும் வடக்கனுங்க வேலைக்கு வந்துட்டானுங்க’, ‘வடக்கனுங்கள அடிச்சு பத்தணும்; ஒருத்தன் கூட இருக்க கூடாது’, ‘வடக்கன் நாயே உன்ன கொல்லாம விடமாட்டேன்’ ஆகிய வசனங்கள் வட மாநில தொழிலாளர்கள் மீதான வெறுப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
முழுப் படமும் எந்த அளவில் வடமாநில தொழிலாளர்களின் பிரச்சினை பேசுகிறது என்பது தெரியவில்லை. மேலோட்டமான டீசர் பகைமையையும், வெறுப்பையையும் மட்டுமே பேசுகிறது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT