Published : 20 Apr 2024 02:12 PM
Last Updated : 20 Apr 2024 02:12 PM
துபாய்: துபாய் வெள்ளத்தில் சிக்கிய நடிகை எரிகா பெர்னாண்டஸ், “சில மணிநேரத்தில் இருண்ட மேகங்கள் நகரத்தை மொத்தமாக மூடிவிட்டன. பகல் இரவானது. காற்று பலமாக வீசியது. வீட்டில் இருந்த பொருட்கள் தூக்கி வீசபபட்டன” என்று தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
துபாயில் கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் வரலாறு காணாத கனமழை பெய்தது. சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் வெள்ளநீர் புகுந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஒரு வருடத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் இந்த நிலை ஏற்பட்டதாக துபாய் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த மழை வெள்ளத்தில், கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக நடிகை எரிகா பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். இவர், சசி இயக்கிய ‘ஐந்து ஐந்து ஐந்து’, மீரா கதிரவன் இயக்கிய ‘விழித்திரு’, ‘விரட்டு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் இவர், துபாயில் செட்டிலாகியுள்ளார். படப்பிடிப்புக்காக அங்கிருந்து வந்து செல்கிறார்.
துபாயில் பெய்த வரலாறு காணாத மழை வெள்ளம் குறித்து தனது வீட்டின் பால்கனியில் இருந்து எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் கூறியிருப்பதாவது: “16-ம் தேதி நள்ளிரவு 12.45 மணிக்கு லேசான குளிர்காற்று வீசியது. தொடர்ந்து மின்னலும் மழையும் பெய்தது. நேரம் செல்ல செல்ல, மழை தீவிரமடைந்தது. நான் ரசிக்கத் தொடங்கினேன்.
ஆனால் அது ஆரம்பம்தான். சில மணிநேரத்தில் இருண்ட மேகங்கள் நகரத்தை மொத்தமாக மூடிவிட்டன. பகல் இரவானது. காற்று பலமாக வீசியது. வீட்டில் இருந்த பொருட்கள் தூக்கி வீசபபட்டன. மற்ற பால்கனிகளில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் பொருட்கள் பறந்து வெளியே விழுந்தன. பயம் தொற்றிக்கொண்டது.
எங்கள் வீட்டுக்குள் விழுந்த மழைத் தண்ணீரை, சுத்தம் செய்யவும், வரவிடாமல் தடுக்கவும் போராடினோம். எங்களைப் பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி. அதிர்ஷ்டவசமாக, நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT