Published : 15 Apr 2024 05:46 PM
Last Updated : 15 Apr 2024 05:46 PM

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு: அக்.7-ல் நேரில் ஆஜராக குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பரஸ்பரம் விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் வரும் அக்டோபர் 7-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ் நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன், தனுஷ் - ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் ட்விட்டரில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் அக்டோபர் 7-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x