Published : 30 Mar 2024 11:23 AM
Last Updated : 30 Mar 2024 11:23 AM
பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான படம், ‘அழகி’. இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான், இயக்குநராக அறிமுகமானார். உதயகீதா சினி கிரியேஷன்ஸ் சார்பில் உதயகுமார் தயாரித்தார்.
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படம் இப்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு நேற்று மீண்டும் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் உதயகுமார், பார்த்திபன், தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர். பார்த்திபன் கூறியதாவது: தங்கர் பச்சான், அற்புதமான கதாசிரியர். அவரைத்தவிர, இந்தப் படத்தை வேறு யாராலும் இந்த அளவுக்கு வெற்றி அடைய வைத்திருக்க முடியாது. நாம் காதலிக்கும் பெண்களுக்கெல்லாம் வெவ்வேறு பேர் இருக்கலாம்.
அவர்களுக்கு பொதுவான பெயர் ‘அழகி’ தான். 22 வருடம் கழித்து கூட காதலர்கள், காதல் மீது எந்த அளவுக்கு ஈர்ப்புடன் இருக்கிறார்கள் என்பதற்கான சான்று தான் இந்தப் படத்தின் ரீ ரிலீஸ். காதலர்கள் தோற்றுப் போகலாம். ஆனால் காதல் தோற்றுப் போகாது. அதனால் தான் இந்த ‘அழகி’யும் தோற்கவில்லை. நந்திதா தாஸ் என்னிடம் பேசும்போது கூட ‘அழகி 2’-க்காக காத்திருக்கிறேன் என்று கூறினார். நானும் காத்திருக்கிறேன் என தயாரிப்பாளர் உதயகுமாரிடம் இங்கே சொல்லிக் கொள்கிறேன். இவ்வாறு பார்த்திபன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT