Published : 18 Mar 2024 10:24 AM
Last Updated : 18 Mar 2024 10:24 AM

‘வேலைக்காரி’ பாணியில் உருவான ‘விஜயகுமாரி’

அண்ணாவின் ‘வேலைக்காரி’ வெற்றி பெற்றதை அடுத்து, அதே போன்று ஒரு புரட்சிகரமான படத்தை உருவாக்க முடிவு செய்தார், தயாரிப்பாளர் ஜுபிடர் சோமு.

ஒரு படம் வெற்றி பெற்றால் அதே ஸ்டைலில்படங்களை உருவாக்குவது அந்த காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டது என்பதற்கு இதுவும் உதாரணம். அப்படி உருவான படம் ‘விஜயகுமாரி’. ‘வேலைக்காரி’யை இயக்கிய ஏ.எஸ்.ஏ. சாமியே இதையும் இயக்கினார். ‘ராஜகுமாரி’ படத்தில் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ஏ.எஸ்.ஏ சாமிக்கு இது மூன்றாவது படம்.
‘வேலைக்காரி’யில் நாயகனாக நடித்த கே.ஆர்.ராமசாமி இதிலும் ஹீரோவாக நடித்தார். டி.ஆர்.ராஜகுமாரி நாயகி. அவருக்கு இரண்டு வேடம். செருகளத்தூர் சாமா, டி.எஸ்.பாலையா, குமாரி கமலா, எம்.என்.நம்பியார், பி.கே.சரஸ்வதி, கே.எஸ்.அங்கமுத்து, புளிமூட்டை ராமசாமி, ஆர்.பாலசுப்ரமணியன் உட்பட பலர் நடித்தனர். வைஜயந்திமாலா, லலிதா-பத்மினி நடனம் ஆடியிருந்தனர்.

சமூக மாற்றத்தை விரும்பும் நாயகன், லஞ்சத்தை ஒழித்து மக்களை மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்க நினைக்கிறார். அதை அவரால் செய்ய முடிந்ததா, இல்லையா என்பது கதை. வரலாற்றுப் பின்னணியில் உருவான படம் இது.

நாட்டின் இளவரசியை காதலிக்கிறான் நாயகன். இளவரசியை தனது மகனுக்குத் திருமணம் செய்து நாட்டை கைப்பற்ற நினைக்கும் அமைச்சர், நாயகன் மீது பொய்க் குற்றச்சாட்டுச் சுமத்தி, நாடுகடத்துகிறார். இப்படிச் செல்லும் கதைக்குள் ஏகப்பட்ட கிளைக்கதைகளை வைத்திருந்தனர். தெரிந்த கதை என்பதாலும் கிளைக் கதைகள் போரடித்ததாலும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்தார். பாடல்களை உடுமலை நாராயணகவியும் கே.டி.சந்தானமும் எழுதியிருந்தனர். மொத்தம் 14 பாடல்கள். இதில் ‘லாலு லாலு லாலு’ என்ற பாடல், அப்போது சிறந்த வரவேற்பைப் பெற்றது. இதில் ஆடிய வைஜயந்திமாலாவின் மேற்கத்திய ஸ்டைல் நடனம் ரசிக்கப்பட்டது.

‘ஆணவத்தினாலே அழிந்து போகாதே’ என்ற பாடலுக்கு லலிதா- பத்மினி ஆடிய பாடல் காட்சியும் பேசப்பட்டன. ‘பொழுது விடிந்தால் ராஜா, ராணி நாம்…’ என்ற பாடலுக்கு டி.ஆர்.ராஜகுமாரி ஆடினார். இதே தேதியில் 1950-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு வயது 74.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x