Published : 16 Mar 2024 07:37 PM
Last Updated : 16 Mar 2024 07:37 PM
சென்னை: தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியாகி 22 ஆண்டுகளைக் கடந்த ‘அழகி’ திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 29-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக இயக்குநர் தங்கர் பச்சான் தனது எக்ஸ் தள பக்கத்தில், “பார்த்தவர் மனங்களில் எல்லாம் நீங்காத இடம் பிடித்துக் கொண்ட அழகி திரைப்படம் 22 ஆண்டுகள் கடந்து இப்பொழுது மீண்டும் மார்ச் 29ஆம் தேதி திரையரங்குகளில் புதிய தொழில்நுட்பங்களில் புதுப்பொலிவுடன் வெளியாகிறது. எத்தனைத் தலைமுறைகள் கடந்தாலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்துக் கொள்ளும் அழகியாக இருந்ததை திரைப்படத்தை மீண்டும் இன்று நான் கண்டபோது உணர்ந்தேன்.
மனித மனங்களை பண்படுத்தும் காதலின் மெல்லிய உணர்வுகள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் அழகி போன்ற திரைப்படங்கள் இக்கால எதிர்காலத் தலைமுறைகளுக்கு தேவைப்படுவதாக உணர்கிறேன். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் முன்னாள் இந்நாள் காதலன், காதலி மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து காணக்கூடிய திரைப்படமாக ‘அழகி’ உள்ளது.
100 திரையரங்கங்களில் 100 நாட்களுக்கு மேல் எவ்வித விளம்பரமும் இன்றி மக்கள் கொண்டாடிய அழகியை இக்கால தலைமுறையும் காண என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்வீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அழகி: தங்கர் பச்சான் இயக்கத்தில் கடந்த 2002- ம் ஆண்டு வெளியான படம் ‘அழகி’. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக், மோனிகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காதலியை திருமணத்துக்கு பிறகு சந்திக்கும் நாயகன் என்ற கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே அப்போது நல்ல வரவேற்பை பெற்றது. ரீ ரிலீஸ் படங்களின் வரத்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்ததாக இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT