Published : 13 Mar 2024 04:35 PM
Last Updated : 13 Mar 2024 04:35 PM
ஹைதராபாத்: “மலையாள திரையுலகம் சிறந்த நடிகர்களை உருவாக்கி வருவதைப் பார்க்கும்போது பொறாமையாக உள்ளது” என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
மலையாள படமான ‘பிரேமலு’ கடந்த பிப்.9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மலையாள ரசிகர்களைத் தாண்டி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் விளைவாக, இப்படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா பெற்றார். இதையடுத்து படம் தெலுங்கு டப்பிங்கில் வெளியாகி அங்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமவுலி கலந்துகொண்டு படக்குழுவை பாராட்டினார். அப்போது பேசிய அவர், “மலையாளத் திரையுலகம் சிறந்த நடிகர்களை உருவாக்குகிறது என்பதை பொறாமையுடன் ஒப்புக்கொள்கிறேன். இந்தப் படத்திலும் நடிகர்கள் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் இது. காரணம் உங்கள் அருகில் இருப்பவர்களுடன் இணைந்து நீங்களும் சிரிக்கும்போது, அது இன்னும் சிறந்த அனுபவமாக இருக்கும்.
மகன் கார்த்திகேயா இப்படத்தை தெலுங்கில் வெளியிட விருப்பம் தெரிவித்தபோது, எனக்கு அதில் ஆர்வமில்லை. படத்தை பார்த்தபின் சிறந்த பொழுதுபோக்கு படம் என்பதை உணர்ந்தேன். நகைச்சுவையை சிறப்பாக எழுதிய எழுத்தாளருக்கு எனது பாராட்டுகள்.
மமிதா பைஜூவின் நடிப்பை ட்ரெய்லரிலேயே கணித்துவிட்டேன். சிறப்பாக நடித்திருந்தார். நாஸ்லென் நடிப்பை ஆரம்பத்தில் குறைத்து மதிப்பிட்டேன். முழு படத்தை பார்த்த பின்பு அவர் நடிப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். வாழ்த்துகள்” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT