Published : 12 Mar 2024 04:54 PM
Last Updated : 12 Mar 2024 04:54 PM

‘ஆடுஜீவிதம்’ படத்துக்காக இயக்குநரின் 16 ஆண்டு அர்ப்பணிப்பு: பிருத்விராஜ் நெகிழ்ச்சிப் பகிர்வு

சென்னை: “ஆடுஜீவிதம் போன்ற ஒரு படத்தை இயக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்படத்தில் நடித்ததை மன நிறைவாக உணர்கிறேன்” என்று நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்வுகளில் பிருத்விராஜும், படத்தின் இயக்குநர் ப்ளஸ்ஸியும் கலந்துகொண்டு வருகின்றனர். அப்படியான நிகழ்வில் பிருத்விராஜ் பேசுகையில், “இயக்குநர் ப்ளஸ்ஸி தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதில் அவர் ஒரு நாள் கூட சமரசம் செய்து கொண்டதில்லை.

‘ஆடுஜீவிதம்’ போன்ற ஒரு படத்தை இயக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. காரணம், ஒரு படத்துக்காக தன் வாழ்நாளில் 16 ஆண்டுகள் அர்ப்பணித்த ஒருவர்தான் ப்ளஸ்ஸி. அவரைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. நாம் நினைப்பதை திரையில் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் அவர் அதனை திறம்பட செய்தார். அவர் படத்துக்காக தன்னுடைய 100 சதவீத உழைப்பையும் செலுத்தியுள்ளார்.

ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின் இறுதியிலும், இந்தப் படத்தில் நம் கதாபாத்திரத்துக்கு 10 சதவீத கூடுதல் உழைப்பை கொடுத்திருக்கலாமோ என நினைப்பேன். ‘ஆடுஜீவிதம்’ படத்தை பொறுத்தவரை மன நிறைவாக உணர்கிறேன். என்னுடைய பெஸ்டை நான் கொடுத்திருக்கிறேன்” என்றார்.

படத்தின் இயக்குநர் ப்ளஸ்ஸி பேசுகையில், “உலகம் முழுவதும் உள்ள மலையாளிகள் இந்த புத்தகத்தை கொண்டாடுகிறார்கள். அதனை படமாக இயக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. புத்தகத்தில் 43 அத்தியாயங்கள் உள்ளன. அதை ஒரு திரைப்படமாக எடுக்க 9 முதல் 10 மணிநேரம் தேவைப்படும். இப்படம் தொடக்கத்தில் 3.30 மணி நேரமாக இருந்தது. பின்னர் நீளத்தை குறைத்துள்ளோம்” என்றார்.

ஆடு ஜீவிதம்: மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடுஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனிக்கிறார்.

வீட்டுக் கடனை அடைக்க அரேபிய தேசத்திற்கு புலம்பெயரும் மலையாளி ஒருவர் அங்கு சென்று ஆடு மேய்ப்பவராக மாறுவதையும் அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை. இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x