Published : 08 Mar 2024 06:10 PM
Last Updated : 08 Mar 2024 06:10 PM

“குற்றங்களை எளிமையாக்குவது போதைப்பொருள் பழக்கமே” - இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து

சென்னை: “போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் தான் இதுபோன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை” என புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.

ஊர்வசி நடித்துள்ள ‘J.பேபி’ படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் “நம் வீட்டில் இருக்கும் பெரியவர்களை நாம் எப்படி பார்க்கிறோம் என்ற பார்வையை இந்த படம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என நினைக்கிறேன். முதியோர் இல்லங்களில் விட்ட பெரியவர்கள் குறித்து அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் யோசிப்பார்கள் என நினைக்கிறேன்.

மாற்றங்கள் உருவாக இப்படம் முதல் படியாக இருக்கும். நீலம் புரொடக்‌ஷன் நிறுவனம் ஒரு படத்தை தயாரிக்கிறது என்றால் அதற்கு சில வரைமுறைகள் உண்டு. சமூகத்துக்கு எதிரான தவறான கருத்துகளை உள்ளடங்கிய படங்களை எடுக்க கூடாது என்பது தான் அதன் ஐடியா. இந்த கதை குடும்பத்துக்கு தேவையான கதையாக உள்ளது” என்றார்.

புதுச்சேரி சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், “பதற்றமாக இருந்தது. பயமாகவும் இருக்கிறது. எனக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்தச் செய்தியை என்னை தொந்தரவு செய்துவிட்டது. அது தொடர்பான வீட்டில் பேசவில்லை. அந்த அளவுக்கான பதற்றத்தை உருவாக்கிவிட்டது. பெரிய பயம் உள்ளது. அந்த பயம் ஒரு குற்றத்தை மையப்படுத்தியது மட்டுமல்ல. இங்கே நிறைய பிரச்சினைகள் உள்ளன. நம் கல்வி நிலையங்கள் சரியான கல்வியை சொல்லிக்கொடுக்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகிறது.

போதைப்பொருள் பழக்க வழக்கங்கள் இது போன்ற குற்றங்களை இன்னும் எளிமையாக்கிவிடுகின்றன. இது ஒரு சமூகத்துக்கான பிரச்சினை. குற்றம் செய்தவர் இன்று மாட்டிக்கொண்டார்கள். ஆனால், இதில் சிக்கிக்கொள்ளாத, அப்பாக்கள், தாத்தாக்கள், மாமன்கள் இன்னும் உலாவிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

இந்த ஒட்டுமொத்த சமூகமும் தான் இதற்கு பொறுப்பேற்றுகொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் எல்லோருமே தான் காரணம். அடிப்படையாக கல்வியும், பகுத்தறிவற்ற தன்மையும் தான் நம்மை இப்படியான மோசமான இடத்துக்கு கொண்டு செல்கிறது. இது ஒவ்வொரு தனிமனிதருக்குமான பொறுப்பு” என்றார்.

தொடர்ந்து, “அரசியல் பற்றிய எந்த ஐடியாவும் இப்போது இல்லை. சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறேன். ‘தங்கலான்’ பட வேலைகள் முடிந்துவிட்டன. தேர்தலுக்காக காத்திருக்கிறோம். தேர்தல் தேதி அறிவித்துவிட்டால், படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டு விடும். வதந்திகள் பரவி வருகின்றன. அப்படி எதுவும் இல்லை. படம் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது. சென்சார் செல்ல வேண்டியது தான் மிச்சம். படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x