Published : 04 Mar 2024 10:05 AM
Last Updated : 04 Mar 2024 10:05 AM

திரை விமர்சனம்: ஜோஷ்வா இமை போல் காக்க

அமெரிக்க சிறையில் இருக்கும் மெக்சிககோ போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனுக்கு எதிரான விசாரணை, நீதிமன்றத்தில் வர இருக்கிறது. அவருக்கு எதிராக வாதா டும் வழக்கறிஞர் குந்தவியை (ராஹி) போட்டுத் தள்ள திட்டமிடுகிறது. போதை மா ஃபியா. அவரை பத்திரமாகப் பாதுகாக்கும் அசைன்மெ ன்ட் சென்னையில் இருக்கும் ஜோஷ்வாவுக்கு (வருண்) வருகிறது.

குந்தவி அவரின் முன்னாள் காதலி என்பதால், அதிக அக்கறையுடன் அதாவது, கண்ணை இமை காப்பது போல் காக்க முயல்கிறார். அவரால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா? என்பதை ஏகப்பட்ட புல்லட் தெறிப்புடன் சொல்கிறது படம்.

வழக்கமாக, கவுதம் வாசுதேவ் மேனன் படங்களில் நிறைய கதையும் கொஞ்சம் ஆக்‌ஷனும் இருக்கும். இதில் அள்ள அள்ள ஆக்‌ஷனையும் தொட்டுக்கொள்ள கொஞ்சூண்டுகதையையும் பரிமாறியிருக்கிறார் கவுதம். ஆக்‌ஷன் தான் என்று முடிவுசெய்துவிட்டு திரைக்கதையை எழுதியிருப்பார்கள் போல. எதுவும்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சில காட்சிகள், வசனங்கள், மேக்கிங்கில் கவுதம் டச் தெரிந்தாலும் அதெல்லாம் கும்மிருட்டுக்குள் கூலிங் கிளாஸ் அணிந்த கதைதான்.

விமான நிலையத்தில், குடியிருப்புகளில், சாலைகளில் குறுகிய தெருக்களில் என எங்கெங்கும் சுட்டுக்கொண்டே இருக்கிறார், வருண். விழுந்துகொண்டே இருக்கிறார்கள் ஆட்கள். என்ன ஏதென்று கேட்க ஒரு போலீஸ்காரர் கூட இல்லை.

கான்ட்ராக்ட் கில்லர் வேடத்தில் அழகாகப் பொருந்துகிறார், வருண். அவரது உயரமும் தோற்றமும் ஆக்‌ஷன்பிளாக்கிற்கு நியாயம் செய்கிறது. ஆனால், காதல் மற்றும் எமோஷனில் இன்னும் நடிக்க வேண்டும், சாரே!.குந்தவியாக வரும் ராஹிக்கு அதிகவேலையில்லை. பாதி நேரம் நாயகனுடன் ஓடிக்கொண்டிருக்கிறார். மீதியை ரொமான்ஸுக்கு செலவிடுகிறார்.

திடீரென்று வரும் கிருஷ்ணாவுக்கும் ஜோஷ்வாவுக்கும் இடையிலான ‘பேக்ஸ்டோரி’ நன்றாக இருக்கிறது என்றாலும் அவர் கேரக்டரை அந்தரத்தில்விட்டிருக்கிறார்கள், அப்படியே. நாயகனுக்கு உதவும் திவ்யதர்ஷனி, ஓரிரு காட்சியில் வரும் மன்சூரலிகான், விசித்ரா, கடைசி காட்சிகளில் வரும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் கதையின் வேகத்தில் எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு தனித்து தெரிகிறது. வித்தியாசமான ஷாட்கள், சில காட்சிகளில் தெரியும் லைட்டிங் மற்றும் வண்ணங்களில் அவர் அனுபவம் பளிச்சிடுகிறது. கார்த்தியின் இசையில் 'டப்பாசு நேரம்' பாடலும் பின்னணி இசையும் கதையை இழுத்துச் செல்ல உதவி இருக்கிறது.

படத்தின் ஒரே ஆறுதல், யானி பென்-னின் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே. திணற திணற ஆக்‌ஷனை விரும்புவர்களுக்கு ‘ஜோஷ்வா’வை பிடிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x