Published : 28 Feb 2024 11:12 AM
Last Updated : 28 Feb 2024 11:12 AM
சென்னை: விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் உருக்கமாக பேசியுள்ளார்.
இது குறித்து அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசிய கவுதம் மேனன், “துருவ நட்சத்திரம் திரைப்படம் கடைசி நேரத்தில் வெளியாக முடியாமல் போனது என் இதயத்தை நொறுக்கிவிட்டது. எனக்குள் ஒருவித அமைதியின்மை ஏற்பட்டது. அது என் குடும்பத்தினருக்கும் கவலையை ஏற்படுத்தியது. குறிப்பாக என்னுடைய வேலை தொடர்பான விஷயங்களில் தலையிடாத என் மனைவி கூட எனக்குள் ஏதோ சரியாக இல்லை என்பதை புரிந்து கொண்டார். எனக்குள் எல்லா நேரமும் ஏதோ ஒருவித வெறுமை உணர்வு இருந்து கொண்டே இருந்தது.
இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக கூடுதல் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கெனவே இருந்த முதலீட்டாளர்கள் வரிசையில் படத்தின் ரிலீஸுக்கு முதலீடு செய்தவர்களும் இணைந்து கொண்டதால் என்னால் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அது ஒரு கெட்ட கனவு போல இருந்தது. அது எளிதானதாக இருக்கவில்லை” என்றார்.
நடிகர் சிம்புவின் படத்துக்காக ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணத்தைக் கொடுக்காவிட்டால் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை வெளியிடக் கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, திட்டமிட்டபடி ‘துருவ நட்சத்திரம்’ படம் கடந்த ஆண்டு நவ. 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT