Published : 22 Feb 2024 07:28 PM
Last Updated : 22 Feb 2024 07:28 PM
சென்னை: ‘உறியடி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜய்குமாரின் புதிய படமான ‘எலக்சன்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2016-ல் ‘உறியடி’, 2019-ல் ‘உறியடி 2’ படத்துக்குப் பின் நடிகர் விஜய்குமார் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இடைவெளிக்குப் பின் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது ‘ஃபைட் க்ளப்’. இந்தப் படம் சிறந்த மேக்கிங்கால் பாராட்டப்பட்டது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் விஜய்குமார் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் அறிவிப்பு முதல் தோற்றத்துடன் தற்போது வெளியாகியுள்ளது.
‘எலக்சன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை தமிழ் இயக்குகிறார். இவர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சேத்துமான்’ படத்தின் இயக்குநர். இது அவரின் இரண்டாவது படம். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை ரீல் குட் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
முதல் தோற்றம் எப்படி? - ‘சேத்துமான்’ படத்தில் உணவு அரசியலைப் பேசிய இயக்குநர் தமிழ் இந்தப் படத்தில் நேரடியாக வாக்கு அரசியலைப் பேச இருப்பதை முதல் பார்வை உணர்த்துகிறது. போஸ்டரில் வெள்ளை வேட்டி, சட்டையுடன் சிரித்த முகமாக நடந்து வருகிறார் விஜய்குமார். ஓரத்தில் உள்ளாட்சி தேர்தல் என்ற பேனர் ஒட்டப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி வெளியான போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT