Published : 14 Feb 2024 09:13 AM
Last Updated : 14 Feb 2024 09:13 AM
புதுடெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், அவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களைக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பத்திரிகையில் அவர் பெயரையும் அமலாக்கத்துறை சேர்த்துள்ளது.
இதற்கிடையே, சிறையில் இருந்துகொண்டே ஜாக்குலின் குறித்து அவ்வப்போது கடிதங்கள் எழுதி வந்தார் சுகேஷ். இந்நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவுக்கு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில், நான் கவனக்குறைவாக ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டேன். சுகேஷ் என்ற நபர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருந்து வெளிப்படையாக மிரட்டி வருகிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அவர் எழுதும் கடிதங்கள் என் தனிப்பட்ட உரிமைகளை மட்டும் பாதிக்கவில்லை. அவை நமது நீதி அமைப்பின் இதயத்தைத் தாக்குகின்றன. அதனால் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். சிறையில் இருக்கும் ஒருவருக்கு அனைத்து தகவல் தொடர்பும் எவ்வாறு கிடைக்கிறது என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த டிசம்பரில் தாக்கல் செய்த மனுவில், சுகேஷ் தனக்குக் கடிதம் அனுப்ப நீதிமன்றம் தடை விதிக்கவேண்டும் என்றும் ஜாக்குலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT