Published : 04 Feb 2024 08:44 AM
Last Updated : 04 Feb 2024 08:44 AM

திரை விமர்சனம்: வடக்குப்பட்டி ராமசாமி

வடக்குப்பட்டி கிராமத்தில் சிறுவயதில் பானை வியாபாரம் செய்கிறார் ராமசாமி (சந்தானம்). அந்த ஊரில் காட்டேரி இருப்பதாக நம்பும் மக்கள், அதை எதிர்கொள்ள அஞ்சுகின்றனர். அந்த நேரத்தில் திருட்டுப் போகும் ராமசாமியின் பானையால், காட்டேரியின் கதை முடிவுக்கு வருகிறது. அந்தப் பானையைக் கடவுளாக நினைத்து மக்கள் வணங்க, அவர்களின் நம்பிக்கையை வைத்து, கோயில் எழுப்பி, ஏமாற்றி காசு பார்க்கிறார் சந்தானம். கோயில் சொத்துகளை அடைய தாசில்தார் (தமிழ்) முயற்சிக்கிறார். அதற்கு சந்தானம் ஒத்துப்போகாததால், கோயிலை மூட வைக்கிறார். அதை மீண்டும் திறக்க சந்தானம் என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

மக்களின் மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி காசு சம்பாதிக்கும் இளைஞன் என்கிற ஒன்லைன் கதைக்கு நகைச்சுவை முலாம் பூசி கிச்சுக்கிச்சு மூட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. கடவுள் நம்பிக்கையே இல்லாத சந்தானம், மக்களின் நம்பிக்கையை வைத்து ஏமாற்றும் காட்சிகள் வெடிச் சிரிப்புடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சந்தானத்தின் நகைச்சுவைக்கு ‘லொள்ளு சபா’ கூட்டணியான மாறன், சேஷூ பக்கபலமாக இருந்து சிரிக்க வைக்கிறார்கள். எழுபதுகளில் நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குரிய ஒப்பனைகளிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஒரு கண் நோயை வைத்து, அதை ‘சாமிக் குத்த’மாக மடைமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. மக்களின் அறியாமை பற்றி சிந்திக்கவும் வைக்கின்றன. படம் தொடங்கியது முதல் இறுதிவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், அதை மையப்படுத்தியே கதை நகர்வது படத்துக்குப் பலம்.

படத்தில் லாஜிக் ஓட்டைகளும் ஏராளம். எப்போதும் முட்டிக் கொள்ளும் ஊர் பெரியவர்கள் (ரவி மரியா, ஜான் விஜய்) மோதலுக்கு என்ன காரணம் என்பதற்கு சில காட்சிகளையாவது கூடுதலாக வைத்திருக்கலாம். இவர்கள் பிள்ளைகளின் காதல் காட்சிகளும் ஓடிப்போகும் காட்சிகளும் அயற்சியைத் தருகின்றன.

ராணுவ அதிகாரியாக வரும் நிழல்கள் ரவியின் பாத்திரப் படைப்பு நகைச்சுவைக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அவர் வடக்குப்பட்டிக்கு வரும் காட்சிகள் திணிக்கப்பட்ட உணர்வைத் தருகின்றன. எம்.எஸ்.பாஸ்கர் பாத்திரப் படைப்பில் குழப்பத் தன்மை கடைசி வரை இருந்ததைத் தவிர்த்திருக்கலாம். மேகா ஆகாஷின் ஒப்பனைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அவருடைய பாத்திரத்துக்கும் கொடுத்திருக்கலாம். கடவுள் நம்பிக்கை அற்றவராக சந்தானம் இருப்பதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

சந்தானம் வழக்கம்போல் தன் நகைச்சுவை முத்திரையோடு நடித்து கவர்கிறார். அவருடைய டைமிங் டெலிவரி வசனங்கள் சிரிக்க வைக்கத் தவறவில்லை. ஊர் பெரியவர்களாக வரும் ரவி மரியா, ஜான் விஜய் சிரிக்கவும் வைக்கிறார்கள். நிழல்கள் ரவியின் காட்சிகள் குபீர் ரகம். சந்தானத்துடனேயே வரும் சேஷூ, மாறன் ஆகியோர் நகைச்சுவையில் அதகளம் செய்திருக்கிறார்கள். தமிழ், மொட்டை ராஜேந்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

ஷான் ரோல்டன் இசையில் பின்னணி இசை கவர்கிறது. தீபக்கின் ஒளிப்பதிவு, சிவனாண்டீஸ்வரனின் படத்தொகுப்பு, ராஜேஷின் கலை இயக்கம் ஆகியவை படத்துக்குப் பக்கபலம். லாஜிக்கை மறந்துவிட்டு சென்றால் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ சிரிப்புக்கு உத்தரவாதம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x