Published : 02 Feb 2024 01:49 PM
Last Updated : 02 Feb 2024 01:49 PM

சினிமாவில் இருந்து விலகுகிறார் விஜய்? - கைவசம் உள்ள படங்களுக்குப் பிறகு முழுநேர அரசியல் பணி

சென்னை: ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் பொருட்டு நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும் விஜய் விளக்கமளித்துள்ளார், அதில், “என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன்.

என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ் நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன்” என்று விஜய் கூறியுள்ளார்,

இதன் அடிப்படையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘The Goat' படத்தை முடித்துவிட்டு பின்பு முழுமையாக விஜய் அரசியல் பணிகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x