Published : 06 Jan 2024 07:37 PM
Last Updated : 06 Jan 2024 07:37 PM
மகாராஷ்டிரா: “ஒரு பெண்ணிடம் ஆண் ஒருவர் தனது ஷூவை நாக்கால் துடைக்க சொல்வதும், அந்தப் பெண்ணை அடிப்பது சரியென சொல்வதுமான காட்சியமைப்பு கொண்ட படத்தை மக்கள் சூப்பர் ஹிட்டாக்குவது ஆபத்தானது” என்று ‘அனிமல்’ படம் குறித்து பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியரும், திரை எழுத்தாளருமான ஜாவித் அக்தர் ஆதங்கத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகரில் 9-வது அஜந்தா - எல்லோரா சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜாவித் அக்தர், “எது சரியானது, அது எப்படி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுடன் நாயக பிம்பம் கட்டமைக்கப்பட வேண்டும். இன்றைய எழுத்தாளர்கள் அது குறித்து சிந்திக்க வேண்டும், ஏனென்றால் அவர்களிடம் நிறைய குழப்பங்கள் நிலவுகிறது.
எது சரி, எது தவறு என்பதை சமூகம் தீர்மானிப்பதில்லை. ஆனால், இவையெல்லாம் சினிமாவில் பிரதிபலிக்கிறது. ஒரு காலம் இருந்தது. அப்போது பணக்காரர்கள் எல்லோரும் கெட்டவர்களாகவும், ஏழைகள் நல்லவர்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டனர். ஆனால், இன்று நம் எல்லோர் மனதிலும் எப்போது பணக்காரன் ஆகப்போகிறோம் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது. நாம் பணக்காரர்களாக மாற ஆசைப்படுவதால் இப்போது அவர்களை தப்பானவர்களாக காட்டுவதில்லை” என்றார்.
தொடர்ந்து ‘அனிமல்’ படத்தை மறைமுகமாக சாடிய அவர், “ஒரு பெண்ணிடம் ஆண் ஒருவர் தனது ஷூவை நாக்கால் துடைக்க சொல்வதும், அந்தப் பெண்ணை அடிப்பது சரியென சொல்வதுமான காட்சியமைப்பு கொண்ட படத்தை மக்கள் சூப்பர் ஹிட்டாக்குவது ஆபத்தானது. தற்போதை காலக்கட்டத்தில் படத்தின் இயக்குநர்களைக் காட்டிலும், பார்வையாளர்களுக்கு பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
பார்வையாளர்கள் தான, எதைப் பார்க்க வேண்டும், எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். புறக்கணிப்பது பார்வையாளர்களின் கையில் தான் இருக்கிறது. இன்று சில இயக்குநர்கள் மட்டுமே நல்ல சினிமாவை படமாக்குகிறார்கள். நீங்கள் எவ்வளவு நாட்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் சினிமாவின் தலைவிதி அமையும்” என்றார். ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடி வசூலை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT