Published : 05 Jan 2024 11:29 AM
Last Updated : 05 Jan 2024 11:29 AM
சென்னை: வெளிநாட்டில் இருந்ததால் விஜயகாந்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழலில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்த சூர்யா, அங்கு கண்ணீர் விட்டு அழுதார்.
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவு இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது தரையில் சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்த அவர், பின்னர் கண்களை மூடி அழுதார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “அண்ணனின் பிரிவு மிகவும் கஷ்டமாக உள்ளது. நான்கு, ஐந்து படங்கள் நடித்தபிறகும் எனக்கு பெரிய பாராட்டுக்கள் எதுவும் கிடைக்கவில்லை. ’பெரியண்ணா’ படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. 10 நாட்கள் வரை அவருடன் சேர்ந்து பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் மிகவும் அன்புடன் என்னை நடத்தினார். முதல் நாளே அவருடன் சேர்ந்து சாப்பிடுமாறு அழைத்தார். வேண்டுதலுக்காக 8 ஆண்டுகள் அப்போது அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். அப்போது என்னை உரிமையுடன் திட்டி, “நீ நடிகன். உடலில் சக்தி வேண்டும்” என்று சொல்லி என்னை அசைவம் சாப்பிட வைத்தார்.
அந்த பத்து நாட்களும் நான் அவரை பிரமிப்புடன் பார்த்தேன். அவர் எல்லாரையும் பக்கத்திலேயே வைத்திருக்க விரும்புவார். அவரை அணுகுவது சிரமமாகவே இருக்காது. எப்போது வேண்டுமானாலும் அவரிடம் போய் பேச முடியும். அவருடன் இன்னும் நேரம் செலவழிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அதிகமாக இருக்கிறது. அவரைப் போல இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியின்போது அவருடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்பது எனக்கு மிகப்பெரிய இழப்பு” இவ்வாறு சூர்யா கண்கலங்கியபடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT