Published : 29 Dec 2023 08:02 AM
Last Updated : 29 Dec 2023 08:02 AM
தூத்துக்குடி: அசாத்தியமான மன உறுதி கொண்ட மனிதர் விஜயகாந்த். ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
'கேப்டன்' என தமிழக மக்களால் அழைக்கப்பட்ட தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் பெரும் திரளாக அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அமைச்சர்கள், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காரணமாக விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படப்பிடிப்புக்காக தூத்துக்குடி சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அசாத்தியமான மன உறுதி கொண்ட ஒரு மனிதர். எப்படியும் உடல்நிலை தேறி வந்துவிடுவார் என்று எல்லாரும் நினைத்தோம். ஆனால், சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்த்தபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்துவிட்டது. அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழக மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை மக்கள் இழந்துவிட்டனர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT