Published : 22 Dec 2023 05:24 PM
Last Updated : 22 Dec 2023 05:24 PM
சென்னை: “என்னுடைய படங்களில் சமரசங்களை குறைத்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் ‘அயோத்தி’ மிகச் சிறப்பான படம்” என இயக்குநர் வெற்றிமாறன் புகழ்ந்துள்ளார்.
21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 57 நாடுகளின் 126 படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா வியாழக்கிழமை (டிச. 21) நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘அயோத்தி’ தேர்வு செய்யப்பட்டது. ‘மாமன்னன்’ படத்துக்காக சிறந்த நடிகர் விருதை வடிவேலு பெற்றார். ‘விடுதலை பாகம் 1’ படத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “பொதுவாக இப்படியான படங்களை இயக்கும்போது, கன்டென்டையும், வெகுஜன எதிர்பார்ப்பையும் சேர்த்து உருவாக்குவது சவாலாக இருக்கும்.
சில இடங்களில் கன்டென்டில் சமரசம் செய்து கொள்வோம். சில இடங்களில் வெகுஜன ரசனைக்காக சமரசம் செய்துகொள்வோம். இதனால் படத்தின் குவாலிடியில் சில சமயம் சிக்கல் இருக்கலாம். உங்களுக்குத் தெரியும், என் படங்களின் டப்பிங் கச்சிதமாக இருக்காது. மிஸ் ஆகும். நிறைய குறைகளுடன், தவறுகளுடன் தான் படத்தை எடுத்து முடிக்கிறோம். இந்த மாதிரியான கதையாடலை இந்த சமூகத்தில் நிகழ்த்த வேண்டும் என நோக்கத்துக்கான அங்கீகாரமாக இந்த விருதை கருதுகிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நான் சொன்ன இந்த சமசரங்களை குறைத்துக்கொண்டு சிறப்பான படைப்புகளை உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன். இந்த விருது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.
அதேபோல ‘அயோத்தி’ படம் இன்றைக்கு பேச வேண்டிய படைப்பு. பல இடங்களில் நான் அயோத்தி படத்தை பேசாமல் விட்டுவிட்டேன். இந்த வாய்ப்பை அதற்காக பயன்படுத்திக் கொள்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் வெளியான படங்களில் ‘அயோத்தி’ சிறந்த படம். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT