Published : 19 Dec 2023 10:50 AM
Last Updated : 19 Dec 2023 10:50 AM
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார், பசுபுலேட்டி கண்ணாம்பா என்ற பி.கண்ணாம்பா. தனது 13 வயதில் தெலுங்கு நாடகங்களில் நடக்கத் தொடங்கிய அவர், பிறகு திரைப்படங்களில் நடித்தார். ‘கிருஷ்ணன் தூது’ படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர், 1942-ல் வெளியான ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்துப் புகழ்பெற்றவர். அப்போது தமிழ் தெரியாத அவர், தெலுங்கில் எழுதி வைத்து அந்தப் படத்தின் வசனத்தைப் பேசி அசத்தி இருப்பார். தமிழ், தெலுங்கில் 170-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பி.கண்ணாம்பா, 1930-1960 காலகட்டங்களில் தனது சொந்த பட நிறுவனமான ஸ்ரீராஜராஜேஸ்வரி பிலிம்ஸ் சார்பில் 25 படங்களைத் தமிழ், தெலுங்கில் தயாரித்தும் இருக்கிறார்.
அவர் தயாரித்து இயக்கிய படங்களில் ஒன்று, ‘லக்ஷ்மி’. வில்லனாக அறியப்பட்ட ஆர்.எஸ்.மனோகர், இதில் ஹீரோ. எல்.நாராயணராவ், சி.வி.வி.பந்துலு, எம்.சரோஜா, சந்திரபாபு, டி.ஆர்.ராமச்சந்திரன், சி.கே.சரஸ்வதி உட்பட பலர் நடித்தனர் இந்தப் படத்தில். பி.கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம் இயக்கினார் . இதன் வசனம், பாடல்களை எஸ்.டி.எஸ்.யோகியார் எழுதினார். முழு படமும் ஜெமினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டதால், அந்த நிறுவனத்தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் எம்.டி.பார்த்தசாரதி, ஒளிப்பதிவாளர் எல்லப்பா, கலை இயக்குநர் எம்.எஸ்.ஜானகிராம், தாதா சாஹேப் பால்கே-யின் உறவினரான பிரபல ஒப்பனை கலைஞர் சகாதேவ ராவ் தாப்கெரே ஆகியோர் இந்தப் படத்தில் பணியாற்றினர்.
சுந்தரம்மா பாடிய ‘சிங்காரமே எழிலலங்காரமே ஜோராய்’, ஜிக்கி குரலில் ‘இலவு காத்த கிளியானேன்’, பி. லீலா பாடிய ‘ஆதாரம் நீயே அருள் புரிவாயே’, ‘நாதனை மறவேனே’, ‘அத்தான் போடும் பொம்மையே’, ‘என்னாசையே பாழானதே’ உட்பட பல பாடல்கள் இடம்பெற்றன. இதில் ‘சிங்காரமே எழிலலங்காரமே ஜோராய்’ அப்போது சூப்பர் ஹிட். குடும்பத்துக்குள் நடக்கிற சதி, மோதல், மாமியார், மருமகள் கொடுமை உள்ளிட்ட விஷயங்களைப் பேசியது இந்தப் படம். 1953-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் வெற்றி பெறவில்லை. எளிதில் யூகிக்க முடிகிற திரைக்கதைதான் அதற்குக் காரணம் என்று அப்போது விமர்சிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT