Published : 17 Dec 2023 05:36 AM
Last Updated : 17 Dec 2023 05:36 AM

திரை விமர்சனம்: கண்ணகி

பொள்ளாச்சியில் வசிக்கும் கலைக்கு (அம்மு அபிராமி) வரும் வரன்களை அவள் அம்மா சரளா (மவுனிகா) ஏதேனும் காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். கோயம்புத்தூரில் வசிக்கும் நேத்ராவால் (வித்யா பிரதீப்) குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்னும் பொய்யான குற்றச்சாட்டில் அவர் கணவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கை எதிர்கொள்ள, இளம் வழக்கறிஞர் (வெற்றி எம்) உதவுகிறார். பெங்களூருவில் பணியாற்றும் நதி (ஷாலின் ஸோயா) திருமணம் செய்துகொள்ளாமல் சுதந்திரமாக வாழ விரும்புகிறார். ஆனால் அவருடன் லிவ்-இன் உறவில் இருக்கும் அபிரூபன் (அதேஷ் சுதாகர்) திருமணத்துக்கு வற்புறுத்துகிறார். சென்னையில் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் கீதா (கீர்த்தி பாண்டியன்). அவரும் உதவி இயக்குநராக இருக்கும் அவர் துணைவர் யஷ்வந்தும் அந்தக் கருவைக் கலைக்க முயல்கிறார்கள். கலை, நேத்ரா, நதி, கீதா ஆகிய 4 பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன? இவர்களுக்கிடையிலான தொடர்பு என்ன? என்பதைச் சொல்கிறது மீதிக் கதை.

சமூக- பொருளாதார நிலை, வசிப்பிடம், வயது என வெவ்வேறு பின்னணி கொண்ட 4 கதாபாத்திரங்களை முன்வைத்து பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமகாலப் பிரச்சினைகளைப் பேச முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர். பெண்களின் அசலானப் பிரச்சினைகள் குறித்து முற்போக்குப் பார்வையுடனும் அக்கறையுடனும் சரியான புரிதலுடனும் காட்சிகளை அமைத்து பார்வையாளர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் 4 கதைகளை ஓன்றன்பின் ஒன்றாகக் காண்பித்து குறும்படங்களை இணைத்ததுபோல் இல்லாமல் ஒன்றோடொன்று இணைகோடாகப் பயணிப்பதாகக் காண்பித்திருப்பது முழுமையான திரைப்பட அனுபவத்தைத் தருகிறது. கதைச் சூழலும் கதாபாத்திரங்களும் சடாரென மாறி மாறி வருவது உறுத்தாத வகையில், திரைக்கதையும் படத்தொகுப்பும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

முதல் பாதியில் பல அழுத்தமான காட்சிகளுடன் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் தொய்வடைகிறது. நான்கு கதைகளிலுமே பிரச்சினைக்கான காரண காரியங்களை இன்னும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கலாம். குறிப்பாக சுதந்திரவாத சிந்தனை கொண்ட பெண்ணியவாதியாக சித்தரிக்கப்பட்டிருக்கும் நதியுடன் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. அலுவலகத்தில் அனைவருக்கும் முன்னால் காலைத் தூக்கி மேஜையில் நீட்டி வைத்துக்கொள்வது, திருமண உறவுக்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் லிவ்-இன்பார்ட்னரை அனைவருக்கும் முன் அவமதிப்பது என அவர் செயல்கள் பிறரைத் துன்புறுத்துவதாகவே இருக்கின்றன.

சட்டவிரோத கருக்கலைப்புக்கு திருநங்கை ஒருவர் உதவுவதாக காண்பித்திருப்பது பாலின சிறுபான்மையினர் குறித்த பிரச்சினைக்குரிய சித்தரிப்பு. மோசமான திருமணம் என்றாலும் விவாகரத்து செய்யக் கூடாது என்பதும் திருமணம்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது போன்ற வசனங்களும்பிரச்சினைக்குரியவை. நான்கு கதைகளுக்கும்உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் இறுதி ட்விஸ்ட்கொஞ்சம் ஆச்சரியம் தருகிறது. ஆனால் அந்தட்விஸ்டுக்காகவே ஓரிரு கதைகளின் முடிவுகளைவலிந்து திணிக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றுகிறது.

முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஸோயா,கீர்த்தி பாண்டியன் ஆகிய நால்வருமே கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மவுனிகா வழக்கம்போல் தனது நடிப்பு முத்திரையைப் பதிக்கிறார். முற்போக்கு சிந்தனைகள் கொண்ட பாசக்கார அப்பாவாக மறைந்த நடிகர் மயில்சாமி இப்போது நம்மிடம் இல்லையே என்று ஏங்க வைக்கும் நடிப்பைத் தந்திருக்கிறார். யஷ்வந்தாக நடித்திருப்பவர், வெற்றி எம், அதேஷ் சுதாகர் ஆகியோர் குறை சொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஷான் ரஹ்மானின் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. பாடல்களும் இனிமையாக உள்ளன.ராம்ஜியின் ஒளிப்பதிவு திரைக்கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது.

பெண்களின் சமகாலப் பிரச்சினைகளை அக்கறையுடன் பேசியிருப்பது பாராட்டுக்குரியது என்றாலும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் நிறைவளித்திருப்பாள் இந்த ‘கண்ணகி’

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x